Published : 13 Dec 2014 08:49 AM
Last Updated : 13 Dec 2014 08:49 AM
ஓடும் ரயிலில் திடீரென ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்பெண்ணின் கணவர் ரயிலில் இருந்த சக பெண் பயணிகளிடம் தனது மனைவிக்கு பிரசவம் பார்க்கும்படி கெஞ்சினார்.
ஆனால் தாங்கள் பிரசவம் பார்த்தால், தாய்க்கும், சேய்க்கும் ஏதாவது நடந்து விட்டால் பிரச்சினை ஆகிவிடும் என மறுத்துவிட்டனர். இந்நிலையில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங் கைகள் அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்த்து மருத்துவமனையில் சேர்த்து உதவியுள்ளனர்.
லக்னோவைச் சேர்ந்த ராஜுவும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி நிர்மலாவும் நேற்று கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் லக்னோவுக்கு சென்று கொண் டிருந்தனர்.
அந்த ரயில் நேற்று மதியம் தெலங்கானா மாநிலம் கரீம் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நிர்மலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
வலியால் துடித்த மனைவியை கண்டு பதறிய அவரது கணவர் ராஜு , சக பெண் பயணிகளிடம் சென்று தனது மனைவிக்கு பிரசவம் பார்க்கும்படி கெஞ்சினார். ஆனால் பயந்து யாரும் முன் வரவில்லை.
அந்த சமயத்தில் ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சில திருநங்கைகள் பிரசவம் பார்க்க முன் வந்தனர். அவர்களும் சில பெண்களை உதவிக்கு அழைத்தனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து, திருநங்கைகள் அந்தப் பெட்டியில் புடவைகளால் திரை அமைத்து தாங்களே பிரசவம் பார்த்தனர்.
சுகப்பிரசவத்தில் நிர்மலா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ராமகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, உடனடியாக தாயையும், சேயையும் பத்திரமாக வெளியே அழைத்து வந்த திருநங்கைகள், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸில் ராமகுண்டம் அரசு மருத்துவமனையில் தாயையும், சேயையும் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.
பின்னர் திருநங்கைகள், தாங்கள் ரயில் பிச்சை எடுத்து சேமித்த ஐநூறு ரூபாயை குழந்தையின் கையில் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் சென்றனர். திருநங்கைகளின் இந்த மனிதாபிமானமிக்க செயலை கண்டு மருத்துவர்கள் உட்பட பலர் பாராட்டினர்.
ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சில திருநங்கைகள் பிரசவம் பார்க்க முன் வந்தனர். அவர்களும் சில பெண்களை உதவிக்கு அழைத்தனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT