Published : 12 Dec 2014 02:58 PM
Last Updated : 12 Dec 2014 02:58 PM
'அநாகரீகமான உடை' எனக் கூறி நவி மும்பையில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதுமட்டுமல்லாது தடையை மீறி நைட்டி அணியும் பெண்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பை, ரபாலே பகுதியில் உள்ள கிராமம் கோதிவ்லி. இக்கிராமத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது 'நைட்டி' அணிய தடை விதிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூர் மகளிர் சுய உதவிக்குழுவான இந்திரயானி மஹிலா மண்டல் இத்தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. உத்தரவை மீறியவர்களிடமிருந்து ரூ.500 அபராதம் வசூலித்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், தடை உத்தரவு உள்ளூர் போலீசுக்கு தெரியவர, உடனடியாக சம்பந்தப்பட்ட சுய உதவிக்குழுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போலீஸாரிடம், சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பு மன்னிப்பு கோரியதுடன் தடை உத்தரவையும் திரும்பப்பெற்றது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தனிமனிதருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை யாரும் தட்டிப் பறிக்கமுடியாது. இதனை, மகளிர் அமைப்புக்கு எடுத்துரைக்கவே அவர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT