Last Updated : 17 Dec, 2014 11:16 AM

 

Published : 17 Dec 2014 11:16 AM
Last Updated : 17 Dec 2014 11:16 AM

‘புதிய விசா நடைமுறையால் கோவாவில் சுற்றுலா மேம்படும்’

கோவா விமான நிலையத்தில் கடந்த 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ‘Visa on Arrival (VOA)’ வசதியால் மாநிலத்தில் சுற்றுலா மேம்படும் என மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்துசேர்ந்தபின் விசா பெற்றுக்கொள்ளும் விஓஏ வசதியை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த நவம்பர் 27-ம் தேதி தொடங்கி வைத்தது.

இதைத் தொடர்ந்து கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் இந்த வசதி டிசம்பர் 4-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

43 நாடுகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்காக தேர்வு செய்யப்பட்ட 9 விமான நிலையங்களில் கோவாவின் டபோலிம் விமான நிலையமும் ஒன்று.

இந்த விமான நிலையம் இதுவரை 357 விஓஏ விசாக்களை வழங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக உக்ரைனைச் சேர்ந்த 183 பேருக்கும், இதையடுத்து ரஷ்யாவைச் சேர்ந்த 154 பேருக்கு இந்த வசதி தரப்பட்டுள்ளது. ஜோர்டான், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முறையே 3,4,1 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

10 - 15 நிமிடங்களில் இந்த நடைமுறை முடிந்துவிடும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வசதியால் கோவாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயரும் என மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பில் சமரசம் செய்வது நல்லதல்ல!

புதிய விசா நடைமுறை குறித்து சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் திருஞானம் கூறும்போது "வழக்கமான முறையில் வரும்போதே போலியான விசா, பாஸ்போர்ட் கொடுத்து தவறான நபர்கள் நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றனர். 15 நிமிடத்தில் விசா என்பது பாதுகாப்பு தரப்பில் சரியான நடவடிக்கையாக இருக்காது. ஐஎஸ் உட்பட பல தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைய காத்துக்கொண்டு இருக்கும்போது இந்நடைமுறை அவர்களுக்கு வசதியாகிவிடும். ஒரு நாட்டுக்குள் நுழைவதற்குதான் அவர்கள் மிகுந்த கஷ்டப்பட வேண்டும். நுழைந்தபிறகு அவர்களை பிடிப்பது மிகவும் கடினம். அந்த நுழைவு வசதியை நாமே ஏற்படுத்தி கொடுப்பதுபோல் இது இருக்கிறது. கோவாவில் இதை எப்படி கையாளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்வது நமக்கு நல்லதல்ல" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x