Published : 20 Dec 2014 08:56 AM
Last Updated : 20 Dec 2014 08:56 AM

ஜார்க்கண்ட், காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல்: 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று 5-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்டில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஜம்மு - காஷ்மீரில் 20 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட இரு மாநிலங்களிலும் முக்கியமான அரசியல் தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் இன்று முடிவு செய்ய இருக்கின்றனர்.

ஜார்க்கண்டில் 16 தொகுதிகளில் 208 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 16 பேர் மட்டுமே பெண்கள். அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிடது. பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் போட்டியிடும் தும்கா தொகுதி, அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் சசாங் சேகர் போகத் போட்டியிடும் போரியோ தொகுதி, சோரனின் நெருங்கிய உறவினர் சீதா முர்முனீ சோரன் போட்டியிடும் ஜாமா தொகுதி ஆகியவை இன்று வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் முக்கியமானவை.

இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் 16 தொகுதிகளிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக 15 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

ஜார்க்கண்டில் 36 லட்சத்து 90 ஆயிரத்து 69 பேர் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். இவர்களில் சுமார் 18 லட்சம் பேர் பெண்கள். 2.3 லட்சம் பேர் முதல்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள்.

ஜார்க்கண்டில் இறுதிக்கட்ட தேர்தலுக்காக 4,448 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 833 சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 1,496 சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு அங்கு பாது காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. காஷ்மீர், ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.

காஷ்மீரில் தீவிர பாதுகாப்பு

காஷ்மீரில் வாக்குப்பதிவு நடை பெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர், போலீஸார் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்குப் பதிவின் போது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

காஷ்மீர் துணை முதல்வர் தாரா சந்த் அமைச்சர்கள் லால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். காங் கிரஸ் மூத்த தலைவரான தாரா சந்த் 1996, 2002, 2008-ம் ஆண்டு பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் 18 லட்சத்து 28 ஆயிரத்து 904 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 9,59,011 பேர் ஆண்கள், 8,69,891 பேர் பெண்கள். மொத்தம் 2,366 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு பாஜக, ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மெஹ்பூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x