Published : 08 Feb 2014 02:38 PM Last Updated : 08 Feb 2014 02:38 PM
காந்தியைக் கொன்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் பிரதிநிதி மோடி: குஜராத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு
மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக நரேந்திர மோடி உள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் பார்தோலியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி யில் அவர் மேலும் பேசியதாவது:
"காந்தி கொலை செய்யப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் பரிந்துரைத்தார். ஆர்.எஸ்.எஸ். ஒரு நச்சு சித்தாந்தம். அது நமது நாட்டின் ஆன்மாவை அழித்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த வரலாற்றை பாஜகவினர் படிக்கவில்லை போலும். படேலின் கொள்கைகள் பாஜக தலைவர்களுக்கு தெரி யாது. அவரைப் பற்றி படிக்க வில்லை, அறிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக அவரது சிலையை எழுப்புகின்றனர். நரேந்திர மோடி தன்னை மட்டுமே வளப்படுத்தி கொள்கிறார். அவரது ஆட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் இதுவரை 6 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
மாநிலத்தில் வாழும் 44 ஆயிரம் பஞ்சாப் விவசாயிகள் மிரட்டப்படு கின்றனர். மோடியின் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைதன்மை இல்லை. அவரது அரசில் ஊழல்வாதிகள் பலர் உள்ளனர். ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.
இதேபோல் மேலும் 6 மசோதாக்கள் நாடாளு மன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றை நிறைவேற்றவிடாமல் பாஜக தடுக்கிறது. ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால், குஜராத்தில் தகவல் உரிமை ஆணையர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவர்கூட நீதிமன்ற உத்தரவால் நியமிக்கப்பட்டவர். லோக் ஆயுக்தா அமைப்பை தடுத்த நிறுத்த மாநில அரசு வழக்கு செலவுக் காக இதுவரை ரூ.40 கோடி வரை செலவிட்டுள்ளது" என்றார் ராகுல் காந்தி.
டீக்கடைக்காரர்களுக்கு மரியாதை...
டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக முடியாது, அவர் டீக்கடை வைக்க விரும்பினால் இந்தக் கூட்டத்தில் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார்.
இந்த விமர்சனத்தை சாதகமாகப் பயன்படுத்தி பாஜக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறது. மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
அவரின் பேச்சு தனிப்பட்ட கருத்து, காங்கிரஸ் கருத்து அல்ல என்பதை உணர்த்தும் வகையில் பார்தோலி கூட்டத்தில் ராகுல் பேசினார்.
"பல்வேறு தொழில்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் டீக்கடை நடத்தலாம், சிலர் டாக்ஸி ஓட்டலாம், சிலர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கலாம். டீக்கடைக்காரர், தொழிலாளி, விவசாயி என அனைத்து தரப்பினரையும் நாம் மதிக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை ஏமாற்றி முட்டாள் ஆக்குபவர்களை மதிக்கக் கூடாது" என்றார் ராகுல் காந்தி.
WRITE A COMMENT