Published : 30 Dec 2014 09:01 PM
Last Updated : 30 Dec 2014 09:01 PM
மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து பாஜக எம்.பி. சஞ்சய் தோத்ரே மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர்களால் விவசாயம் செய்ய முடியவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளட்டும் என்கிற தொனியில் அவர் பேசியது பரவலான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
"விவசாயிகள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். பயிர்களினால் விளைச்சல் தோல்வியடைந்தால் என்ன செய்வதென்று அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள் என்றால் அப்படியே செய்யட்டும்” என்று அவரது தொகுதியில் நடந்த விவசாயிகள் மாநாட்டிலேயே அவர் கூறியுள்ளார்.
அவர் பேசும்போது, “மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட பயிர் பற்றி எங்களில் வெகுசிலருக்கே தெரியும், இத்தனைக்கும் இது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருவதே. எங்களது நிலையே இதுவென்றால், ஏழை விவசாயிகளின் துயரத்தை நினைத்துப் பாருங்கள். நான் பல தருணங்களில் விரக்தியில் பேசியுள்ளேன். அவர்கள் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டுமெனில் செய்து கொள்ளட்டும். விவசாயம் செய்ய வசதியுள்ளவர்கள் மட்டும் செய்யட்டும். மற்றவர்கள் செய்யத் தேவையில்லை” என்றார்.
இதனையடுத்து நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் இவர் இப்படி பொறுப்பற்று பேச முடியுமா என்று பலதரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், தான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்’று தான் பேசிய சூழலையும் பொருளையும் அவர் பிற்பாடு விளக்கினார்: எவ்வளவோ திட்டங்கள் கொண்டு வந்தும் அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை மாறாக இன்னும் மோசமாகவே போயுள்ளது என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டேன், எனவேதான் தங்களால் விவசாயம் செய்ய முடியும் வசதியுள்ளவர்கள் செய்யட்டும் என்று கூறினேன், நான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கொள்ளட்டும் என்று கூறியது விரக்தியில், கோபத்தில் பேசினேன். புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை” என்றார்.
பருத்திச் சாகுபடி செய்யும் மேற்கு விதர்பா பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT