Last Updated : 30 Dec, 2014 08:13 AM

 

Published : 30 Dec 2014 08:13 AM
Last Updated : 30 Dec 2014 08:13 AM

2014-ம் ஆண்டு பாஜகவுக்கு நனவு, காங்கிரஸுக்கு கெட்ட கனவு: இந்திய அரசியலின் கதாநாயகனாக உருவெடுத்த மோடி

2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நினைவில் கொள்ள வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மறக்க வேண்டிய ஆண்டாக இருக்கிறது.

10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த பிறகு பாஜக இந்த ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப் பேற்றது. 1984-க்குப் பிறகு ஒரு கட்சி மக்களவையில் பெரும்பான் மை பெற்றது இதுவே முதல்முறை.

மக்களவைத் தேர்தலில் பல் வேறு முக்கிய கட்சிகளை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது பாஜக. இதைத் தொடர்ந்து ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல் முறையாக இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத் துள்ளது. இங்கும் கூட்டணி ஆட் சிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

ஜெயலலிதா தகுதியிழப்பு

2014-ம் ஆண்டு பல்வேறு வகையிலும் தனிச் சிறப்புக்குரிய ஆண்டாக உள்ளது. இந்தியாவில் நீண்டகாலம் பதவிவகித்த 3-வது பிரதமர் என்ற சிறப்பை பெற்ற மன்மோகன் சிங், தனது 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பின் அமைதியாக வெளியேறினார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதல்வராக பதவியேற்ற அர்விந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு தவறான முடிவை எடுத்து விட்டதாக ஒப்புதல் அளித்தார். ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றத்தால் தகுதியிழப்புக்கு ஆளான முதல் முதல்வர் என்ற பெயருக்கு ஆளானார்.

அரசியல் நாயகன் மோடி

2014-ல் இந்திய அரசியலின் நாயகன் என்று நரேந்திர மோடியை கூறலாம். குஜராத் முன்னாள் முதல்வரான மோடி, பாஜகவுக்கு தொடர் வெற்றி வாய்ப்புகளை பெற்றுத் தந்து எதிர்க்கட்சிகளை திணறச் செய்துள்ளார்.

விலைவாசி உயர்வு, ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்களிடையே காணப்பட்ட அதிருப்தியை அறுவடை செய்துகொண்டார் பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி, மாநில சட்டப்பேரவை தேர்தல்க ளிலும் பிரச்சார நாயகராகத் தொடர்கிறார். அவரது தலைமை யிலான பிரச்சாரம் ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பாஜக வுக்கு வெற்றியை பெற்றுத் தந் துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை அவர் வலுவிழக்கச் செய்துள்ளார்.

வரும் ஆண்டில் டெல்லி, பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. இந்நிலையில் கருப்புப் பணத்தை மீட்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுக்கு மத்திய அரசு செயல்வடிவம் தரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் சிறு பான்மையின மக்களை மதமாற்றம் செய்ய உறுதியேற்றுள்ள இந்துத்வா அமைப்புகளை மோடி கட்டுப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

2002-ம் ஆண்டு குஜராத் கல வரம் தொடர்பாக மோடி தொடர்ந்து பல ஆண்டுகள் விமர்சனங்களை சந்தித்து வந்தார். இந்நிலையில் 2014 மக்களவை தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி மூலம் தன்னை விமர்சித்தவர்களை வியப்புறச் செய்தார்.

தாக்குபிடித்த கட்சிகள்

மக்களவைத் தேர்தலில் நம்புவதற்கரிய 282 இடங்களை பாஜக பெற்றதுடன், 2009 தேர்தலில் 206 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சியை வெறும் 44 தொகுதிகளுடன் கட்டுப்படுத்தியது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம், தமிழ்நாட்டில் அதிமுக ஆகிய 3 பிராந்திய கட்சிகள் மட்டுமே மோடி அலையை தாக்குப்பிடித்தன.

மக்களுடன் தொடர்பு

நாடாளுமன்றத்துக்கு மோடி முதல் முறையாக செல்லும்போது, நுழைவாயில் படிக்கட்டுகளை அவர் வணங்கிச்சென்ற பண்பாடு மக்களின் கவனத்தை பெற்றது. பின்னர் அரசு இயந்திரம் ஆற்றல் பெறவும் முடிவு எடுப்பதை விரைவுபடுத்தவும் மோடி நடவடிக்கை எடுத்தார். வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறார்.

மேக் இன் இந்தியா (இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) உள்ளிட்ட பிரச்சார இயக்கங்களை மோடி அரசு தொடங்கியுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்த சில முக்கிய சட்டங்களுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மற்ற பிரதமர்களுக்கு மாறாக, மேடைப் பேச்சுகள், ரேடியோ நிகழ்ச்சிகள், சமூக வலைதளம், அரசு இணைய தளம் என மக்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் மோடி.

ராகுலுக்கு பின்னடைவு

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிரச்சாரம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இது அவரது தலைமைப் பண்புகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியது. பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் தோல்விகள் இந்த அவமதிப்பை அதிகரித்தது.

இதற்கு மாறாக பிரதமர் மோடிக்கு நெருக்கமான அமித் ஷாவின் தலைமையில், மேற்குவங்கம், தமிழ்நாடு கேரளம் உள்ளிட்ட அடித்தளம் இல்லாத மாநிலங்களிலும் வலுப்பெறமுடியும் என்ற நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது.

ஒன்று சேரும் ஜனதா பரிவார்

பாஜகவின் பிரம்மாண்ட வெற்றியால், முந்தைய ஜனதா பரிவார் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகள் ஒன்றுசேரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆனால் பாஜக மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது. ஆண்டின் இறுதியில், நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x