Published : 18 Dec 2014 08:30 AM
Last Updated : 18 Dec 2014 08:30 AM
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்- 3 சோதனை ராக்கெட் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. அதில் கொண்டுசெல்லப்பட்ட ஆளில்லா விண்கலம், அந்தமான் தீவு அருகே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் கடலில் விழுந்தது.
வளர்ந்த நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு போட்டியாக, விண்ணுக்கு மனிதனை அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கேற்ற 3.7 டன் எடை கொண்ட விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இதை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக 630 டன் எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இதற்கு ரூ.155 கோடி செலவிடப்பட்டுள்ளது. சோதனைக்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த ராக்கெட் ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9.30 மணி அளவில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி பயங்கர சத்தத்துடன் விண்ணில் பாய்ந்தது. புறப்பட்ட 5-வது நிமிடத்தில் ராக்கெட் 126 கி.மீ. தூரம் சென்றதும், அதில் இருந்து ஆளில்லா விண்கலம் விடுபட்டது. அங்கிருந்து விண்கலம் கீழே விழத்தொடங்கியது. திட்டமிட்டபடி, அதில் இருந்த பாராசூட்கள் விரிந்து விண்கலத்தின் வேகத்தை குறைத்தன. மெதுவாக 20.43-வது நிமிடத்தில் அந்தமான் கடல்பகுதியில் விண்கலம் விழுந்தது.
ராக்கெட் பயணம் வெற்றி கரமாக அமைந்து, நிர்ணயிக்கப் பட்ட இலக்கில் விண்கலம் விழுந் ததை அடுத்து, ஸ்ரீஹரிகோட்டா கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், ராக்கெட் ஏவுதள இயக்குநர் எம்.ஒய்.எஸ்.பிரசாத், ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் திட்ட இயக்குநர் எஸ்.சோமநாத் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி வெற்றியைக் கொண்டாடினர். கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இஸ்ரோ வரலாற்றில் இன்று முக்கியமான நாள். மனிதனை அனுப்பும் விண்கலத்தை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை வடிவமைக்கும் பணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு இன்று வெற்றி பெற்றுள்ளோம். எதிர்பார்த்ததுபோல 630 டன் எடை கொண்ட ராக்கெட்டின் திட, திரவ எரிபொருள்கள் சிறப்பாகவே செயல்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் விண்கலம் விழுந் துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைப்பு முழுமையடைந்து, உண்மையான ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள் 2015 மார்ச்சில் விண்ணில் ஏவப்படும்.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
திட்ட இயக்குநர் எஸ்.சோமநாத் பேசும்போது, ‘‘அந்தமான் அருகே கடலில் விண்கலம் விழுந்துள்ளது. அதை மீட்கும் பணியில் கடலோரக் காவல், விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர். விண்கலம் கிடைத் ததும் எண்ணூர் துறைமுகத் துக்கு கொண்டு வரப்பட்டு ஹரிகோட்டா ஏவுதள மையத்திடம் ஒப்படைக்கப்படும். அங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விண் வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த வெற்றி மூலம் இந்தியாவுக்கு நவீன ராக்கெட் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் அதிக எடையைக் கொண்டுசெல்லும் விதமாக இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT