Published : 14 Dec 2014 09:00 AM
Last Updated : 14 Dec 2014 09:00 AM

குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?- தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சரமாரி கேள்விகள்

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் கூற முடியா மல் திருப்பதி தேவஸ்தான அதி காரிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேர னிடம் கடன் வாங்கியதாக புராணங் கள், இதிகாசங்கள் தெரிவிக் கின்றன. இதனால் பக்தர்கள் உண்டி யல் மூலம் செலுத்தும் காணிக்கை களை குபேரனுக்கு வட்டியாக செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை யில்தான் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோடிக் கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு மனு அனுப்பி வருகின்றனர். ஏழுமலையான் தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார், இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார். மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத்தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் இதே கேள்விகளை கேட்டு தேவஸ்தானத்துக்கு சமீபத்தில் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறும்போது, “புராண, இதிகாசங்களில் ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதற்கு சாட்சியங்கள் தேவை என்றும், இதுவரை தேவஸ்தானம் சார்பில் குபேரனுக்கு கட்டிய வட்டி குறித்து கணக்கு காட்ட வேண்டும் என்றும் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கோரி உள்ளனர். சுய விளம்பரத்துக்காக கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x