Published : 21 Apr 2014 08:23 AM
Last Updated : 21 Apr 2014 08:23 AM
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முறைகேடு களை விசாரிக்க சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என். பட்டேல், கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி ஆகி யோரது பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல். முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. அப்போது ஐ.பி.எல். போட்டிகளின்போது நடைபெற்ற ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் முறைகேடுகள் குறித்து நேர்மையாக விசாரிக்கக்கூடிய நபர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு ஏப்ரல் 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதை முன்னிட்டு பி.சி.சி.ஐ.-ன் அவசர செயற்குழு கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஷிவ்லால் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.
அதன்படி சிபி.ஐ. முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என். பட்டேல், கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி ஆகியோரது பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து பிசிசிஐ வழக்கறிஞர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவிக்கப்படும் என்றும் மூவரில் யாரைத் தலைவராக நியமிப்பது என்பது குறித்து நீதிபதிகள் முடிவு செய்வார்கள் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஆர்.கே.ராகவன் நிருபர்களிடம் பேசியபோது, நான் சிபிஐ தலைவராக இருந்தபோது 1999-2000ல் மேட்ச் பிக்ஸிங் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு எனக்கு புதிது அல்ல. எனது பங்களிப்பை முழுமையாக அளிப்பேன் என்றார்.
முன்னதாக ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக பஞ்சாப்- ஹரியாணா தலைமை நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் மற்றும் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, கிரிக்கெட் சூதாட்ட வழக்கு முடியும் வரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் சீனிவாசன் நீடிக்கக்கூடாது என்று அண்மையில் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இடைக்காலத் தலைவராக சுநீல் காவஸ்கர் பொறுப்பு வகித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT