Published : 26 Dec 2014 08:52 AM
Last Updated : 26 Dec 2014 08:52 AM

பிரிந்து சென்ற கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சி: மம்தா பானர்ஜி, சரத்பவார், ஜெகன்மோகன் ரெட்டியுடன் ரகசிய பேச்சு?

மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக, சரத்பவார், மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, ஜி.கே.வாசன் ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தனித்துச் செயல்படுவதற்காக காங்கிரஸி லிருந்து பிரிந்த மம்தா பானர்ஜி 1998-ம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸைத் தொடங்கினார். சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராவதற்கு எதிர்ப்புத் தெரி வித்து அக்கட்சியிலிருந்து பிரிந்து 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி னார் சரத்பவார். ஆந்திராவின் முதல்வராக இருந்த தன் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்த பிறகு, தனக்கு முதல்வர் பதவி அளிக்காததால் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸிலிருந்து பிரிந்து 2011-ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி னார். காங்கிரஸிலிருந்து வாசன் தனியாகப் பிரிந்து தனது தந்தை தொடங்கிய த.மா.கா.(மூப்பனார்) கட்சிக்கு சமீபத்தில் புத்துயிரூட்டி யுள்ளார்.

இவர்கள் நால்வரும் தங்கள் மாநில அரசியலில் நல்ல செல் வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். இதனால், அவர்களை மீண்டும் காங்கிரஸில் இணைக்கும் முயற்சி யில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் இறங்கியிருப்பதாகக் கூறப் படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறியதாவது: பாஜகவின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சியின் சரிவை தடுத்து நிறுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. இதற்காக, பிரிந்த கட்சிகளை ஒன்று சேர்த்தால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களில் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இது, காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தி, பாஜகவை வலுவாக எதிர்க்க உதவும். நேரு குடும்பத்தினரின் தலைமை மீது அதிருப்தியடைந்திருக்கும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில், நேரு குடும்பத்தைச் சாராதவர்கள் காங்கிரஸ் தலைவர்களாக வந்தால் மீண்டும் இணையத் தயார் என சரத்பவார் மற்றும் மம்தா பானர்ஜி தரப்பில் பதிலளித்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஜி.கே.வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின், கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதனை முன்வைப்போம். இம்முயற்சிக்கு டெல்லியில் உள்ள சில காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முன்னோடியான ஜனதா பரிவார்

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் பிரிந்த போதும், பிஹாரில் பாஜக பெருவெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, அரசியல் விரோதிகளாக இருந்த லாலுபிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் இணைந்தனர். தொடர்ந்து ஜனதா கட்சியிலிருந்து பிரிந்த 6 கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணைய முடிவெடுத்துள்ளன.

நாடாளுமன்றத்திலும் இக் கட்சிகள் ஒன்றாகவே இணைந்து செயல்பட்டன. இதைத்தொடர்ந்தே காங்கிரஸும் தன்னிடமிருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைக் கும் முயற்சியில் இறங்கியுள்ள தாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x