Published : 04 Dec 2014 10:31 AM
Last Updated : 04 Dec 2014 10:31 AM

ரயில்வே தனியார் மயமாகவில்லை முதலீடுதான் திரட்டப்படுகிறது: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம்

நிதிப் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் ரயில்வே துறைக்கு தனியாரிடமிருந்து முதலீடு திரட்டப்படுகிறதே தவிர, தனியார் மயமாக்கப்படவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

ஆசியா சொசைட்டி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் விடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று அமைச்சர் பேசியதாவது:

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை கோர அரசு முடிவு செய்துள்ளது. அதாவது இத்துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும். இதை வைத்து ரயில்வே இயக்க செயல்பாடுகளை தனியார்மயமாக்கப் போவதாக மக்கள் மத்தியிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் தவறான எண்ணம் உருவாகியுள்ளது. தனியார் முத லீட்டுக்கும் தனியார் மயமாக்க லுக்கும் உள்ள வேறுபாட்டை பொதுமக்களும் தொழிலாளர் சங்கங்களும் புரிந்துகொள்ளாததே இதற்குக் காரணம்.

இனிமேல் ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்றும் ரயில்வே இனி அரசுக்கு சொந்தமானதாக இருக்காது என்றும் தொழிலாளர் சங்கங்கள் கருதுகின்றன. ரயில்வே நாட்டின் சமூக பொருளாதார கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக தொடர்ந்து திகழும். சரியான நெறிமுறைகளுக்குஉட்பட்டு தனியார் பங்களிப்பு இருக்கும். இதுகுறித்து யாருக்கும் எவ்வித அச்சமும் தேவையில்லை.

ரயில்வே திட்டங்களை நிறை வேற்ற போதிய நிதி ஆதாரம் இல்லாமல்போனால் நாட்டின் மேம் பாடு கருதி தனியார் முதலீட்டை அனுமதிப்பது அவசியம். அப் போதுதான் பொதுமக்களுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றார்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப் பேற்ற பிறகு ரயில்வே துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் முத லீட்டை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இதற்கு 20 லட்சம் ஊழியர்களைக் கொண்ட சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ரயில்வே துறையை மேம்படுத்த போதிய நிதி ஆதாரம் இல்லை என்று கருதினால், வருங்கால வைப்பு நிதியில் உள்ள நிதியை வழங்கவும் தயாராக இருக்கிறோம் என இரு ஊழியர் சங்கங்கள் சமீபத் தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x