Published : 10 Dec 2014 09:38 AM
Last Updated : 10 Dec 2014 09:38 AM
பிசிசிஐ-யின் தலைமைப் பொறுப் பிலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், அந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்பது ஏன் என்று என்.சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் நடைபெற்றது தொடர்பான வழக்கின் விசாரணையும், மீண்டும் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்பதற்கு அனுமதி கோரி என்.சீனிவாசனின் கோரிக்கை தொடர்பான மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாகுர், இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் கூறும்போது, “பிசிசிஐயின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், அந்த அமைப்பின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் என்.சீனிவாசன் பங்கேற்று வருகிறார். தேர்தலை தாமதப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் மற்றும் சூதாட்டம் தொடர்பாக நீதிபதி முகுல் முத்கல் அளித்துள்ள அறிக்கை தொடர்பாக பிசிசிஐ நியாயமாகவும், நடுநிலையுடனும் விசாரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தேசத்தை ஏமாற்றியதாக கருத வேண்டியிருக்கும்.
இந்த விசாரணையை நடத்தவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனையை தீர்மானிக்கலாம். இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசித்து, அதைத் தடுப்பதற்கான விதிமுறைகளை கொண்டு வருவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
என்.சினிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்துதான் ஒதுங்கியிருக்கிறார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பதவியில் உள்ளார். அந்த அடிப்படையில்தான் அவர் பிசிசிஐ கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்” என்றார்.
இந்த வழக்கில் மனுதாரராக இருக்கும் பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வாதிடுகையில், “இந்த வழக்கில் முடிவு தெரியும் வரை பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்” என்றார்.
அதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். பிசிசிஐ நிர்வாகத்தை வழிநடத்துவதற்காக தேர்தல் நடைபெற வேண்டும் என்றனர்.
அப்போது, வழக்கறிஞர் கபில் சிபல், “தேர்தலில் போட்டியிட என்.சீனிவாசனுக்கு உரிமையுள்ளது” என்றார்.
இது தொடர்பாக பேசிய நீதிபதிகள், “தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமையுள்ளது. இந்த வழக்கின் விவாதம் தொடர்ந்து நாளை (இன்று) நடைபெறும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT