Published : 31 Dec 2014 08:34 AM
Last Updated : 31 Dec 2014 08:34 AM

காஷ்மீரில் கூட்டணிகள் மாறுவது ஏன்?- பரபரப்பு பின்னணி தகவல்கள்

ஜம்முகாஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக நாளுக்குநாள் கூட்டணிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இதன் பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

87 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி அதிகபட்சமாக 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்து பாஜக 25 இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில் பாஜக தரப்பில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாஜகவும் மக்கள் ஜனநாயக கட்சியும் நெருங்கி வந்தன.

திடீர் திருப்பமாக மக்கள் ஜனநாயக கட்சிக்கு தானாக முன்வந்து தேசிய மாநாட்டு கட்சி ஆதரவு அளித்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்துவிட்ட பிடிபி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க 5 நிபந்தனைகளை முன்வைத்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை வலுப்படுத்த வேண்டும், அமைதி நிலவும் பகுதிகளில் ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், 6 ஆண்டுகளுக்கும் பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையதுவே முதல்வராக நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மோடி-முப்தி சந்திப்பு திடீர் ரத்து

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசி கூட்டணியை இறுதி செய்ய முப்தி முகமது சையது டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுமாறு முப்தியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாஜகவின் நடவடிக்கையால் பிடிபி தலைமை அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் 370 சட்டப்பிரிவு, முப்தியே முதல்வராக நீடிப்பது ஆகிய நிபந்தனைகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வலுத்தன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நகரில் நிருபர்களை சந்தித்த பிடிபி செய்தித் தொடர்பாளர், எங்கள் கட்சியுடன் மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன, மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மெகா கூட்டணி வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

லண்டனில் இருந்து ஒமர் ‘ட்விட்’

தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா லண்டனில் சிறுநீரக மாற்று அறுவை செய்து கொண்டுள்ளார். பரூக்கை சந்திக்க அவரது மகனும் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா லண்டன் சென்றுள்ளார்.

புதிய கூட்டணியை உறுதி செய்யும் வகையில் அங்கிருந்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் பிடிபி-என்.சி.,-காங்கிரஸ் மெகா கூட்டணி உருவாகியுள்ளது, இது பாஜக தலைவர்களின் தூக்கத்தை தொலைத்துவிட்டது. காஷ்மீரில் விரைவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

முப்திக்கு காங்கிரஸ் பாராட்டு

புதிய கூட்டணியை மாநில காங்கிரஸ் தலைவர் சயீப் சோஸும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர் களிடம் கூறியதாவது: மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால்தான் காஷ்மீர் வளர்ச்சி பெறும் என்று கூறுவது தவறான கண்ணோட்டம். மேற்குவங்கம், தமிழகம், கர்நாடகம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி நடைபெறவில்லையா? பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையது மிகவும் சரியான முடிவை எடுத்துள்ளார் என்று அவர் பாராட்டு தெரிவித்தார்.

கெடு நாளை முடிகிறது

ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனவரி 1-ம் தேதிக்குள் முடிவை தெரிவிக்குமாறு மாநில ஆளுநர் என்.என்.வோரா, மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக ஆகிய கட்சிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி இரு கட்சிகளின் தலைவர்களும் இன்றோ, நாளையோ ஆளுநரை சந்தித்து தங்கள் முடிவை தெரிவிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x