Published : 23 Dec 2014 10:24 AM
Last Updated : 23 Dec 2014 10:24 AM

ஏடிஎம் அருகில் ‘ஐ கிளிக்’ தானியங்கி புகார் பதிவு மையம்: பெண்களின் பாதுகாப்புக்காக ஆந்திர போலீஸார் திட்டம்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, வரதட்சணை கொடுமை, இணையதள குற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதுகுறித்து காவல் நிலையத்துக்குச் சென்று புகார் தெரிவிக்க பெண்கள் தயங்குகின்றனர். இதனால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதோடு, அதே குற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை நவீன தொழில்நுட்ப (‘ஐ கிளிக்’ தானியங்கி இயந்திரம்) உதவியுடன் தடுக்க ஆந்திர போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் ஆந்திர அரசு இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதன்படி மாநிலம் முழு வதும் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு அருகில் இந்த ‘ஐ கிளிக்’ இயந்திரத்தை அமைக்க உள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளால் பாதிக் கப்பட்ட பெண்கள், இந்த இயந்திரத் தின் மூலம் புகார் அளிக்கலாம். கல்வி அறிவு இல்லாத பெண்களும் இந்த இயந்திரத்தில் எளிதாக புகார் தெரிவிக்க முடியும். அதாவது இதில் உள்ள ஒரு பட்டனை அழுத்திவிட்டு தங்களது புகாரை தெரிவித்தால், அது ‘வாய்ஸ் மெசேஜ்’ மூலம் பதிவு செய்யப்பட்டு அந்த தகவல் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும்.

இதில் 24 மணி நேரமும் புகார் செய்ய முடியும். புகாரின் தன்மையை மதிப்பிட்டு, அவசரமானதாக இருந்தால் புகார் பதிவான பகுதிக்கு அருகில் உள்ள நடமாடும் போலீஸார் சம்பவ இடத்துக்கு அனுப்பப்படுவர். இந்த இயந்திரத்தின் மூலம் புகார் கொடுப்பவர்களுக்கு உடனடியாக ரசீதும் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x