Published : 26 Dec 2014 11:54 AM
Last Updated : 26 Dec 2014 11:54 AM
2004-ஆம் ஆண்டு இதே தினத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக ஏற்பட்ட ராட்சத சுனாமி அலைகளுக்கு சுமார் 2,30,00 உயிர்கள் பலியாயின.
இன்றைய தினம் அத்தகைய கொடுந்துயரத்தின் நினைவு தினம் ஆசியா முழுதும் கடற்கரைப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் காலையில் இந்திய நேரம் 6.30 மணியளவில் ரிக்டர் அளவில் சுமார் 9 என்று பதிவான பயங்கர பூகம்பம் இந்தோனேசியாவைத் தாக்கியது. இதனையடுத்து அடுத்த 2 மணி நேரத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சுமார் 12 நாடுகளில் என்னவென்றே தெரியாத நிலையில் ராட்சத அலைகள் கடற்கரை பகுதிகளை நீரால் மூழ்கடித்தது. இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுனாமி தன் கோரத் தாண்டவத்தை ஆடி முடித்துச் சென்ற பிறகு கடற்கரைகளில் பிணங்கள் கிடந்தது இன்றும் மக்கள் நினைவில் ஒரு பேரச்சத்தையும் துயரத்தையும் எழுப்பியுள்ளது.
இன்று இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் பல நாடுகளில் அரசு அதிகாரிகள் உட்பட பொதுமக்கள், பலியானோர் குடும்பத்தினர், உறவினர்கள் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். பலரும் மௌன அஞ்சலி செலுத்துவதும் நிகழ்ந்தது.
இந்தோனேசியாவின் பண்டா அசே பகுதியில் எவ்வளவோ ஆண்டுகளாக கடலுக்கு அடியில் அழுத்தம் சேர்ந்து கொண்டே இருந்துள்ளது. டிச.26, 2004-இல் அது அழுத்தம் தாங்காமல் கடலடித் தரையை பெயர்த்து எடுக்க பில்லியன்கள் டன்கள் அளவில் கடல் நீர் இடம்பெயர்ந்தது. தீவுகள் நகர்ந்தன. பண்டா அசேயில் சுமார் 10மீ உயரத்திற்கு பயங்கர அலைகள் எழுந்து ஊருக்குள் பல கிலோமீட்டர்கள் கடல் நீரில் மூழ்கின.
பண்டா அசேயில் இன்று இந்தோனேசிய துணை அதிபர் யூசுப் கல்லா அஞ்சலி செலுத்தினார். இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 1,60,000 பேர் பலியாகினர்.
தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட வந்த சுற்றுலாப்பயணிகள் 5,000 பேர் பலியாகினர்.
இலங்கையில் பாசஞ்சர் ரயிலை அதன் பாலத்திலிருந்து நகர்த்திச் சாய்த்த சுனாமி பேரலைகளுக்கு ஒரே மூச்சில் 2,000 பேர் பலியாகினர்.
ஆசியாவின் இந்த கொடூரத் துயரத்திற்கு உலகின் பல நாடுகளும் உதவி புரிந்தமையும், பாதிக்கப்பட்ட நாடுகள் பரஸ்பரம் ஆதரவுக் கரம் நீட்டியதும் இன்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT