Published : 18 Dec 2014 08:23 AM
Last Updated : 18 Dec 2014 08:23 AM
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்திருப்பதற்கு அந்நாட்டைச் சேர்ந்த முல்லாக்களே காரணம் என்றும் அங்கு மதத்தின் பெயரால் மோசமான குற்றங்கள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அகமதியாண் முஸ்லிம் ஜமாத் செய்திப் பிரிவின் துணை செயலாளர் மக்பூல் அகமது கூறியதாவது:
பாகிஸ்தானில் முஸ்லிம்களி டையே மதவாத முல்லாக்கள் வெறுப்புணர்வு பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளதால், தீவிரவாத தாக்குதல்களும் அதிகமாகி விட்டது. அப்பாவி மக்களைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதை மீறி உலகம் முழுவதும் இஸ்லாத்துக்கு விரோதமாக பிரச்சாரம் செய்து வருபவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே.
துருக்கியிலும் முன்பு முல்லாக்களால் ஏராளமான பொதுமக்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி வந்தனர். அந்நாட்டின் முதல் அதிபராக கடந்த 1923-ம் ஆண்டு பொறுப்பேற்ற முஸ்தபா கமால் துருக்கி, தீவிரவாதத்துக்கு முடிவு கட்ட விரும்பினார். இதுகுறித்து அறிஞர்கள், முக்கிய பொதுநலவாதிகளை அழைத்து ஆலோசனை கேட்டார்.
அவர்கள் அளித்த ஆலோ சனைப்படி, ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைப்பதாக கூறி துருக்கியின் அனைத்து முல்லாக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
வந்தவர்களை ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பினார். கப்பல் நடுக்கடலில் சென்றபோது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் முல்லாக்கள் அனைவரும் பலியான பிறகு துருக்கியில் அமைதி திரும்பியதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு அங்கிருந்து கிலாபாத் இயக்கமும் முடிவுக்கு வந்து கல்வி நிலையங்களில் ஆண், பெண் இணைந்து பயிலும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்ட துருக்கியில் தற்போது முஸ்லிம்கள் சதவிகிதம் 98 ஆகும்.
இந்த வரலாற்றை அறிந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், முல்லாக்களை அகற்று வதற்காக ஒருமுறை இஸ்லாமா பாத்தின் லால் மசூதிக்குள் ராணுவத்தை அனுப்பினார். இதில் தலிபான்களை ஆதரித்து வந்த அங்குள்ள மவுலானா அஜீஸ் மற்றும் அவரது மகனை குறிவைத்திருந்தார். ஆனால், முஸ்லிம் பெண்களைப் போல் அஜீஸ் பர்தா அணிந்து தப்ப, அவரது மகன் மட்டும் பிடிபட்டார். ஆனால் அதன் பிறகு முஷாரப் பதவியை இழக்க வேண்டியதாயிற்று.
இந்த நிலை பாகிஸ்தானில் அதிகமாகி, ஜமாத்-இ-இஸ்லாம் பாகிஸ்தானின் முக்கிய தலைவரான மவுலானா பசுலூர் ரஹ்மான் போன்றவர்கள், தாலிபான் உட்பட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தம் குழந்தைகள் எனக் கூறி அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவாறு பாதுகாத்து வருகின்றனர்.
துருக்கி அதிபர் எடுத்ததைப் போல் பாகிஸ்தானில் ஒருவர் நடவடிக்கை எடுப்பாரா என்று அங்குள்ள பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை உணர்த்தும் வகையில் பெஷாவர் பள்ளி தாக்குதலின் போது குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கதறி அழுதனர். அப்போது ராணுவ வீரர்களிடம், ‘வாருங்கள்! நவாஸ் ஷெரீப்பிடம் (பாகிஸ்தான் பிரதமர்) இருந்து அதிகாரத்தை கையில் எடுத்து நடவடிக்கையில் இறங்குங்கள்’ எனக்கதறினர். இவ்வாறு மக்பூல் அகமது தெரிவித்தார்.
மதத்தின் பெயரால் மோசமான குற்றங்கள்
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எம். மொஹிபுல் ஹக் கூறியதாவது:
தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடு மைகளுக்கு பழி தீர்க்கும் விதமாக ராணுவப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினாலும் ‘கல்வித் துறையை தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும் என உலக கூட்டமைப்பு’ கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
2009-2012 ஆண்டுகளில் பாகிஸ்தானிலுள்ள 838 பள்ளிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நவீன கல்வி சீரழிவுக்கானது என்று மத வெறியர்கள் அதன் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பெண்கள் கல்விக்காக போராடிய மலாலா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து 30 லட்சம் குழந்தைகள், பெரும்பாலும் சிறுமிகள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களால் அதன் பெயரும் கெட்டுள்ளது. தீவிரவாதிகளைக் கொல்வதாகக் கூறி அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதல் களில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டது அரசை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தியுள்ளது. எனவே, தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த மோசமான குற்றங்கள் மதத்தின் பெயரால் செய்யப்படு கின்றன. தங்களது காட்டுமிராண்டித் தனத்தை நியாயப்படுத்த பாகிஸ் தானிலுள்ள வன்முறை சக்திகள் இஸ்லாமை தவறாகப் பயன் படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ராணுவத் தன்மையை விட கொள்கைத் தன்மை உடையதாகும். எனவே இந்த தீய சக்திகளுக்கு எதிராக அமைதியான நல்லுறவின் அடிப்படையிலான இஸ்லாமிய விளக்கத்தை பாகிஸ்தானில் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஹக் தெரிவித்தார்.
மதமும், அரசியலும் பிரிய வேண்டும்
ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின்) அதிகாரபூர்வ ஆங்கில இதழான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி கூறியதாவது:
நமது பிரதமரும், பாஜகவும் பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது நடைபெற்ற தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. அன்று ரஷ்ய படைக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு அளித்து வளர்த்தது. அது இப்போது அந்த நாட்டுக்கே தலைவலியாக மாறி விட்டது. இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க பாகிஸ்தான் தீவிர மதப் பிரச்சாரத்தை கைவிட வேண்டும்.
இராக்கில் இன்று வெறித் தாண்டவம் போடும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரையும் உருவாக்கி வளர்த்தது அமெரிக்காதான். இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நச்சுப் பாம்புகளை பாகிஸ்தான் தம் நாட்டில் வளர்க்கக் கூடாது எனக் கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அமெரிக்கா தான் நச்சுப் பாம்புகளை வளர்க்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொண்டுபோய் விட்டு விடுகிறது.
இந்தியாவிலும் மத ரீதியான வளர்ச்சி இருந்தாலும் அது அரசியலிலிருந்து ஒதுங்கி நின்று வளர்வதால் பிரச்சினைகள் வருவதில்லை. இந்தியர்களின் மத நம்பிக்கை ஆரோக்கியமானது. பாகிஸ்தான் தாக்குதலை இங்குள்ள முஸ்லிம்கள் பெருமளவில் முன் வந்து கண்டிக்கிறார்கள், அதேபோல், இந்துக்களும் தீவிரமான மதப் பிரச்சாரங்களை கண்டிக்கத் தவறுவதில்லை.
பாகிஸ்தான் தாக்குதல்களை பன்னாட்டு அமைப்புகளில் எழுப்பினாலும் அதை தடுப்பது கடினம். இதை தொடங்கியவர்களே தானாக முன்வந்து மனம் திருந்தினால்தான் பாகிஸ்தானில் அமைதி திரும்பும். இதற்கு அங்கு மதமும் அரசியலும் தனியாக பிரிவது மிகவும் அவசியம்.
அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விட்டது. அதைபோல், இங்கு மும்பையில் நடந்த தாக்குதலே கடைசியானதாக இருக்கும் வகையில் இந்தியாவும் தமது உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம். அதை கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்யும் என நாட்டு மக்கள் நம்புகிறார்கள். இவ்வாறு சாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT