Published : 19 Dec 2014 11:31 AM
Last Updated : 19 Dec 2014 11:31 AM
நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான பேராசிரியர் பணியிடங்கள் 20 ஆண்டுகளாக காலியாக உள்ளன என்று புகார் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழிக்கான இரு பேராசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பல முறை பேராசிரியர் பணியிடத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட்ட போதும், யாரையும் நியமிக்க வில்லை.
ராஜஸ்தானின் ஜெய்பூர் மற்றும் உதய்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் துறை தொடங்குவதற்காக அறி விப்பு வெளியிடப்பட்டு, பேராசிரியர் பணியிடத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. இப்போது வரை பேராசிரியர் யாரும் நியமிக்கப்படவில்லை.
கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் 4 பேராசிரியர்களுக்கான பணி யிடமும், அசாம் மாநிலத்தின் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் ஒரு இணைப் பேராசிரியர் பணியிடமும் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
அதே போன்று டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மலை யாளம் மொழிக்கான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தேசபந்து கல்லூரியிலும் மலையாளத் துறைக்கான பேராசிரியர் பதவியிடம் காலியாக உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையில் பேராசிரியராக உள்ள டி.என்.சத்தீஷன் கூறும்போது, “வட இந்தியாவில் மலையாளம் மொழி எங்கள் பல்கலைக்கழகத்தில் மட்டுமே போதிக்கப்படுகிறது. இதில், காலியாக இருக்கும் ஒரு இணைப் பேராசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வு கடந்த அக்டோபரில் நடத்த திட்டமிட்டு கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது” என்றார்.
வட இந்தியாவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மட்டும் கன்னட மொழிப்பாடம் நடத்தப் பட்டு வந்தது. அதில் ஒரு பேராசிரியர் பணியிடம் 20 ஆண்டு களாகவும், மற்றொரு பணியிடம் 3 ஆண்டுகளாகவும் காலியாக உள்ளன. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கன்னடத்துக் காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பேராசிரியர் பணியிடம், வேறு துறைக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
ஆனால் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது மத்திய மனிதவளத் துறை இணை அமைச் சராக இருந்த என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரி, தெலுங்கு மொழி பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுத்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் எம்.மாரியப்பன் கூறும்போது, “பொதுவாக ஒரு துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் இருந்தால்தான், இடஒதுக்கீட்டின்படி நியமனம் இருக்கவேண்டும். ஆனால், யாரும் இதை கணக்கில் கொள்வதில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT