Published : 06 Dec 2014 01:05 PM
Last Updated : 06 Dec 2014 01:05 PM

மண்ணெண்ணெய் மானியம் ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்க: முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதை நிறுத்திடும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் திட்டத்தை ரத்து செய்ய மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100% மின் வசதி பெற்றுள்ள மாநிலங்கள் மானிய விலை மண்ணெண்ணெய் பெற முடியாத நிலை ஏற்படும் என நிதியமைச்சக வாட்டாரம் தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 சென்சஸ் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு, இத்தகைய கடுமையான முடிவை எடுக்க உறுதியாக இருந்தால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக முன்னாள் முதல்வர் தங்களை கடந்த ஜனவரி 2014-ல் சந்தித்தபோதே, தற்போது மத்திய அரசு வழங்கும் 29,060 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய், 45 விழுக்காடு தேவையை மட்டுமே பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த மண்ணெண்ணெய் தேவைக்கு, 65140 கிலோ லிட்டர் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்துகிறேன்.

இந்நிலையில், மத்திய அரசின் முடிவு தமிழகத்தில் மண்ணெண்ணையை பெருமளவில் பயன்படுத்தும் ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். தமிழகத்தில், கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு இன்றளவும் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் வீடுகளில்கூட ஒரு சிலிண்டர் இணைப்பு மற்றுமே உள்ள வீடுகளில் எரிபொருள் கூடுதல் தேவைக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழல்களை கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெயை ரத்து செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். மேலும், தமிழ்நாட்டின் மொத்த மண்ணெண்ணெய் தேவையான 65140 கிலோ லிட்டரை வழங்க வேண்டுமென கோருகிறேன். ஏழை, நடுத்தர மக்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்த வேண்டாம் என அரசை கேட்டுக் கொள்கிறேன்" என முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x