Last Updated : 10 Dec, 2014 09:44 AM

 

Published : 10 Dec 2014 09:44 AM
Last Updated : 10 Dec 2014 09:44 AM

டெல்லி பலாத்கார சம்பவம்: மாநிலங்களவையில் கண்டனம்

டெல்லியில் வாடகைக் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாநிலங்களவையில் நேற்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் தேசிய உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் முன் வைத்தனர்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் பேசு கையில், “மிகவும் வெறுக்கத்தக்க இந்த சம்பவத்தை அவை உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக கண்டிக்கின்றனர். இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதுடன் இனி எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாதபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “சம்பவத்தில் தொடர்புடைய உபேர் டாக்ஸி சேவையை தடை செய்ய வேண்டும் என நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதன் சட்டபூர்வமான அனுமதி குறித்தும் டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ‘ஜி.பி.எஸ்’ முறையை நாட்டின் அனைத்து வாடகைக் கார்களிலும் கட்டாயமாக்க இருக்கிறோம். டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைந்த 255 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களும் கண்காணிக் கப்படும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்படும். டெல்லி போலீஸாரின் ரோந்து வேன்கள் எண்ணிக்கை 370-லிருந்து ஆயிரமாக உயர்த்தப்படும்” என்றார்.

இதனிடையே பலாத்கார வழக்கில் கைதான ஷிவ் குமாரை டெல்லி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது கடந்த 2006-ல் ஒரு ஆயுத வழக்கும், 2009 மற்றும் 2011-ல் உ.பி.யிலும் 2013-ல் டெல்லியிலும் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இவரை சட்டவிரோதமாக பணியமர்த்திய உபேர் கால் டன்ஸி நிறுவனம் மீதும் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், அந்த நிறுவனம் முறையான அரசு அனுமதியின்றி வாடகைக் கார்களை இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.

இதுபோல், டெல்லியில் முறையான அனுமதியின்றி மேலும் 20 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றையும் மாநில அரசு உடனே தடை செய்ய இருப்பதாகவும் கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x