Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

மோடி கூட்டத்தில் வைகோ பங்கேற்பு இல்லை: இட ஒதுக்கீடு முடிவாகாததால் பாஜக அணியில் திடீர் திருப்பம்

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக் கூட்டத்தில் வைகோ பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கான இடப் பங்கீடு இன்னும் முடிவாகாததால், தற்போது பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக கட்சித் தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி என்று கடந்த ஜனவரி 1ம் தேதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து வைகோவும், பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர்ராவும் நேரில் சந்தித்துப் பேசினர்.

பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ டெல்லியில் சந்தித்துப் பேசினார். இரு கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளும் இரு கட்சிகளின் அலுவலகத்துக்கு வந்து, கூட்டணிப் பேச்சு நடத்தினர்.

மேலும், வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) சென்னை வண்டலூரில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் வைகோ பங்கேற்பார் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளைக் கவனிக்க, இரு கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், மோடியின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாமென்று வைகோவும், கட்சியின் உயர் நிர்வாகிகளும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கூட்டத்தில் மோடியை வரவேற்று சுவரொட்டிகளோ, வரவேற்பு பேனர்களோ, கொடியோ கட்ட வேண்டாமென்றும், கட்சித் தலைமையிலிருந்து மறு உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறும் திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாஜக மற்றும் மதிமுக மேல்மட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டபோது, இந்தத் தகவலை உறுதி செய்தனர். கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் மதிமுகவுக்கான இடங்களும் இன்னும் உறுதியாகாமல் கூட்டணிப் பேச்சுவார்த்தை ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரிலான பாஜக மேடையில் தற்போது ஏற வேண்டாமென்று மதிமுக முடிவெடுத்துள்ளதாக, இரு கட்சி நிர்வாகிகளும் உறுதி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x