Published : 12 Dec 2014 04:14 PM
Last Updated : 12 Dec 2014 04:14 PM

கோட்சேவை புகழ்ந்த விவகாரம்: மன்னிப்புக் கோரினார் பாஜக எம்.பி. - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசியவாதி என, பாஜக எம்.பி. சாக் ஷி மகாராஜ் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சாக் ஷி மகாராஜ் தான் கூறிய கருத்தை திரும்பப் பெற்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பாஜக எம்.பி. சாக் ஷி மகாராஜ், ‘காந்தியைப் போல நாதுராம் கோட்சேவும் ஒரு தேசியவாதி’ எனப் புகழ்ந்தார்.

இந்த பிரச்சினையை, நேற்று மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விவாதம் நடத்த அனுமதி கோரினர். இதற்கு சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அனுமதி அளிக்க மறுத்ததால் அமளி ஏற்பட்டது.

சாக் ஷி மகாராஜ் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். ‘பிரதமர் நரேந்திர மோடி, கோட்சே மீதான தனது அரசின் நிலையை விளக்க வேண்டும்’எனக் கோஷமிட்டு கேள்வி நேரத்தை நடத்த விடாமல் தடங்கல் செய்தனர். எனவே, மக்களவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு மீண்டும் அவை கூடிய போது, அமளிக்கு இடையே பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, ‘மகாத்மா காந்தியைக் கொன்றவர் புகழப்படுவதை கண்டிக்கிறோம். இதன் மீது ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. அவர் கூறிய கருத்தை பாஜகவும், மத்திய அரசும் ஆமோதிக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

பின்னர் சாக் ஷி மகாராஜ் பேசும்போது, “நான் பாபு (காந்தி) மற்றும் இந்த நாடாளுமன்றத்தை மிகவும் மதிக்கிறேன். எதிர்க்கட்சி கள் தொடர்ந்து ஒன்றும் இல்லாத பிரச்சினையை எழுப்புகிறார்கள். கோட்சே தொடர்பான எனது கருத்தை திரும்பப் பெறுகிறேன். எனது பேச்சு எவர் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அப்போது டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்கள் கலவரம் தொடர்பான ஒரு கருத்தையும் சொல்லி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸார் மீண்டும் அமளி செய்தனர்.

மீண்டும் மன்னிப்பு

அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டதற்கிணங்க சாக் ஷி மகாராஜ், தனது கருத்தை திரும்பப் பெறுவதாகக் கூறி, மீண்டும் மன்னிப்பு கேட்டார்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் காந்தி சிலை முன்பாக காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘ஹே ராம்! காந்தியைக் கொன்ற வனுக்கு கொடுக்கப்பட்டது கவுர வம்!’ எனக் கோஷம் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x