Published : 09 Dec 2014 02:35 PM
Last Updated : 09 Dec 2014 02:35 PM
இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளிடமிருந்தும் கோரிக்கை வந்தால், காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக இருநாடுகளும் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பான் கி மூன் கூறியதாவது:
"நான் ஏற்கெனவே கூறியிருந்ததுபோல், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து கோரிக்கை வரும்பட்சத்தில் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண ஐ.நா. சபை தயாராக இருக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை அவசியம். தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை இருநாடுகளும் மீண்டும் துவக்க வேண்டும். இதனால், இரு நாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு பிராந்திய அமைதியும் நிலைநாட்டப்படும்.
பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் மக்களின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் உரிமைகளை பாதுகாப்பது அவசியம்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்திய தரப்பில், எல்லையோர கிராம மக்கள் பலர் பலியாகினர். பாகிஸ்தான் தரப்பும் தங்கள் நாட்டு மக்கள் பலியானதாகவும், காயமடைந்தததாகவும் கூறியிருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள் பலியாவது வேதனையளிக்கிறது. இத்தகைய சூழலில்.
காஷ்மீரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வாக இருக்க முடியும் என நான் தீர்க்கமாக நம்புகிறேன்" என்றார்.
அண்மையில், ஐ.நா. பொதுக்கூட்டத்தின்போது இந்திய ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக சரமாரியாக குற்றஞ்சாட்டியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையில், ஐ.நா. தலையிடக் கோரி அந்நாட்டு பிரதமரின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பான் கி மூனுக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், "காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டு விவகாரம். இவ்விவகாரத்தை பொருத்தவரை சிம்லா ஒப்பந்தத்துக்கு இணங்கி இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும். எனவே, இதில் மூன்றாவது தலையீட்டை விரும்பவில்லை" என இந்திய தரப்பு கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலிலேயே, இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளிடமிருந்தும் கோரிக்கை வந்தால், காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT