Published : 08 Dec 2014 04:21 PM
Last Updated : 08 Dec 2014 04:21 PM

ராஜினாமா எனும் தவறை இனி நான் செய்யமாட்டேன்: கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராஜினாமா எனும் தவறை நிச்சயம் செய்யமாட்டேன் என அக்கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது பேசிய கேஜ்ரிவால்: "49 நாட்களில் ராஜினாமா செய்ததது ஒரு தவறான அரசியல் மதிப்பீடு. அந்தத் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன்.

ராஜினாமா செய்தால் மீண்டும் மறு தேர்தல் உடனடியாக நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. அது ஒரு தவறான அரசியல் கணிப்பு.

ராஜினாமா செய்வதற்கு முன்னர் மக்கள் கருத்தை கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததே மக்கள் மத்தியில் எங்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஆம் ஆத்மிக்கு முழு மெஜாரிட்டி இருந்திருந்தால் ராஜினாமா முடிவை எடுத்திருக்க மாட்டோம்.

கட்சியில் இருந்து சாஷியா இல்மி போன்ற ஒரு சிலர் விலகியது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக்கப்பட்டது. ஆனால், ஒரே ஒருவர் மட்டுமே வெளியாறினார் அவருக்கு பதிலாக லட்சக்கணக்கானோர் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.

மக்கள் மத்தியில் வீண் குழப்பத்தை விளைவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆம் ஆத்மி எனும் பேருந்தின் கிளட்ச், பிரேக் சரியாக இயங்குகின்றன. ஓட்டுநருக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதும் தெரியும். எனவே, ஓட்டுநர் மீது நம்பிக்கை வையுங்கள்.

பாரதிய ஜனதா கட்சியிக்கு கொள்கைகள் இல்லை. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் புதிதாக 20 கல்லூரிகள் திறப்போம் என்கிறது ஆம் ஆத்மி, ஆனால் பாஜகவோ பெண்கள் கல்லூரிகளுக்கு ஜீன்ஸ் அணிந்து வருவதை தடுப்போம் எனக் கூறுகிறது.

அதேபோல், பெண்களின் பாதுகாப்புக்கு அனைத்து பகுதிகளில் சிசிடிவி பொருத்துவோம் என நாம் கூறினால், காதலர் தினத்தை தடுத்து நிறுத்துவோம் எனக் கூறுகிறது பாஜக. இரண்டு கட்சிகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதை ஆம் ஆத்மியின் லட்சியம்" என்றார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கேஜ்ரிவால் இவ்வாறு பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x