Published : 11 Apr 2014 08:22 PM
Last Updated : 11 Apr 2014 08:22 PM

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் திருத்தப்பட வேண்டும்: முலாயம் உறுதி

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் சட்டம் திருத்தப்பட வேண்டும் என உறுதிபட தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், தனது கட்சியை விட பெண்களுக்கு உரிய மரியாதை தருவது வேறு எவருமில்லை என்றார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று பேசிய முலாயம் சிங், பாலியல் பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிப்பது தவறு என்றும், பையன்கள் என்றாலே அவ்வபோது தவறு செய்வது இயல்புதான் என்றும் கூறினார்.

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்கு மகளிர் அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஃபேஸ்புக், ட்விட்டர் வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த எதிர்ப்புகளால் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கொள்ளாமல், பாலியல் வன்கொடுமை சட்டங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்றும், அதில் திருத்தம் வேண்டும் என்றும் மீண்டும் அவர் இன்று கூறினார்.

சம்பாலில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "இன்று நாட்டில் சமாஜ்வாதி கட்சியைப் போன்று பெண்களுக்கு மரியாதை தர யாரும் இல்லை. ஆனால், தவறான சட்டங்கள் தொடர்வதை அனுமதிக்க முடியாது. பல்வேறு நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் பல நாடுகளில் அதை ஒழிப்பதற்கான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அப்படிப்பட்ட விவாதம் தேவை.

தவறான சட்டம் தொடர்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பொய் வழக்குகள் போடுபவர்களும், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றாவளிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பாவிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

நேற்று நான் கேட்டத்தில் என்ன தவறு உள்ளது? நான் தெரிவித்த கருத்து பற்றி நாட்டில் இப்போது பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஜனநாயக நாட்டில் இத்தகைய விவாதங்கள் நடந்து, அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைப்பது நல்லதுதான். இந்த விவகாரத்தில் பலர் எனக்கு ஆதரவாக உள்ளனர்" என்றார் முலாயம் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x