Published : 12 Dec 2014 11:58 AM
Last Updated : 12 Dec 2014 11:58 AM

மதமாற்றத்துக்குத் தடை விதிப்பது அடிப்படை உரிமை மீறலாகும்: காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு

மதமாற்றத்துக்குத் தடை விதிப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறி யுள்ளார்.

மதமாற்றம் குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தயாராகவே உள்ளது என்றும், அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டால் மதமாற்றத்துக்குத் தடை விதிக்கும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு நேற்று கூறியிருந்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சித் தலைவர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

ஒருவர் மனமுவந்து வேற்று மதத்துக்கு மாறுவதை யாரும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது அடிப்படை உரிமையை மீறுவதாகும். தனக்கான மதத்தைத் தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமை ஆகும். அதில் யாரும் தலையிட முடியாது.

எனினும், பணம் மற்றும் இதர வழிகள் மூலம் ஒருவரைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது குற்றமாகும்.

ஆக்ராவில் இந்துக்களாக இருந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றியவர்களை சமாஜ்வாதி அரசு தண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் எந்த அளவு துணிச்சல் உள்ளவர் என்பதைக் காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் காய் நகர்த்தல்கள் ஆகும். இது அவர்களுக்கு அரசியல் ஆதாயம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x