Published : 14 Dec 2014 08:42 AM
Last Updated : 14 Dec 2014 08:42 AM
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை சுட்டுக் கொல்ல இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் கிடைத்த தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஓராண்டுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், இப்போது பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வருகிறார். சுமார் 20 ஆண்டுகளாக அவர் பாகிஸ்தானில் உள்ளார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் பலமுறை கேட்டும் பலனில்லை. தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் புகுந்து தாவூத் இப்ராஹிமை சுட்டுக் கொல்ல இந்திய உளவு அமைப்பான ரகசிய நடவடிக்கை மேற்கொண்டதாக தனியார் செய்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சூப்பர் பாய்ஸ்
பாகிஸ்தானில் ஊடுருவி தாவூத் இப்ராஹிமை முடித்துவிட இந்திய உளவு அமைப்பான ரா 2013-ம் ஆண்டு திட்டமிட்டது. இந்த நடவடிக்கைக்கு சூப்பர் பாய்ஸ் என்று பெயரிடப்பட்டது. இதற்காக ரா அமைப்பில் இருந்து 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு பயிற்சி பெற்ற அவர்கள் சூடான், வங்கதேசம், நேபாள நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு சென்றனர்.
இஸ்ரேல் உதவி
ரா அமைப்பின் இந்த திட்டத் துக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் உதவிகரமாக இருந்தது. கராச்சியில் தாவூத்தின் நடவடிக் கைகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அவரை சுட்டுத் தள்ள திட்டம் வகுக்கப்பட்டது.
இதற்காக தாவூத் வழக்கமாக பயன்படுத்தும் காரை சூப்பர் பாய்ஸ் வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தாவூத் இப்ராஹிம் யார் என்பதை சரியாக அடையாளம் காண்பதற்காக அவரது சமீபத்திய வீடியோ பதிவுகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. கராச்சியில் கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் வசிக்கும் தாவூத் இப்ராஹிம், தினமும் பாகிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த இடத்தில் உள்ள ஒரு தர்கா பகுதியில் தாவூத் இப்ராஹிமை சுட்டுத் தள்ள சூப்பர் பாய்ஸ் குழு முடிவெடுத்தது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி தாவூத் செல்லும் சாலையில் 9 வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை சுட்டுத் தள்ள தயாராக பதுங்கி இருந்தனர்.
தாவூத்தின் கார் அப்பகுதிக்கு வர சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு ரகசிய தொலைபேசி அழைப்பு சூப்பர் பாய்ஸ் வீரர்களுக்கு வந்தது. அதில் கிடைத்த உத்தரவுப்படி தாவூத்தை கொல்லாமல் வீரர்கள் திரும்பிவிட்டனர்.
அந்த தொலைபேசி அழைப்பு யாரிடம் இருந்து வந்தது, நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு தீட்டப் பட்ட திட்டம் ஒரு நிமிடத்தில் கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நெருக்கடி அளித்தது யார்?
இது குறித்து தி இந்துவிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘தாவூத்துடன் தொடர்புள்ள சிலர் இப் போதும் மும்பை, டெல்லி உட்பட பல இடங்களில் உள்ளனர் தாவூத் கொல்லப்பட இருக்கும் தகவல் இவர்களுக்கு தெரிய வந்ததால், அரசின் முக்கியஸ்தர்கள் சிலருடன் பேசி நெருக்கடி கொடுத்திருக்கலாம். இதனால், தாவூதை கொல்லும் முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப் பட்டிருக்கலாம்’ எனக் கருத்து கூறுகிறார்கள்.
மக்களவை தேர்தலின் போது மோடி ஆட்சிக்கு வந்தால் தாவூதை பிடித்து விடுவார் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை மோடி செய்து விடுவார் என பயந்து, தாவூதை முடிக்க ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை எடுத்து கூறவே இந்த செய்தி கசிய விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT