Last Updated : 02 Dec, 2014 08:11 AM

 

Published : 02 Dec 2014 08:11 AM
Last Updated : 02 Dec 2014 08:11 AM

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 13 துணை ராணுவ வீரர்கள் பலி - மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்

சத்தீஸ்கரில் நேற்று மாவோ யிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் மிகுந்த சுக்மா மாவட்ட வனப் பகுதியில் முகாமிட்டுள்ள துணை ராணுவப்படை வீரர்கள் கடந்த 10 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசன்பாரா கிராம பகுதியில் வீரர்கள் நேற்று காலை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியை சுற்றிவளைத்து தேடினர். மாவோயிஸ்ட்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பிரிவினர் ரோந்து வந்தனர்.

மறைந்திருந்து தாக்குதல்

ரோந்து சென்ற வீரர்களின் பாதையில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேடான பகுதியில் இருந்து மறைந்திருந்து நடத்தப்பட்ட திடீர் தாக்குதலால் வீரர்கள் நிலைகுலைந்தனர். சில விநாடிகளில் சுதாரித்துக் கொண்ட வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

எனினும் வீரர்கள் 13 பேர் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். இவர்களில் இருவர் துணை கமாண்டர், உதவி கமாண்டர் நிலையில் இருந்த அதிகாரிகள். மேலும் 13 பேர் காயமடைந்தனர். காலை 10.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. தொடர்ந்து சில மணி நேரம் வரை இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. எனினும் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்கள் காயத்துடன் தப்பிவிட்டனர்.

காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டில் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய பெரிய தாக்குதல் இது.

கூடுதல் வீரர்கள்

சத்தீஸ்கர் மாநில சிஆர்பிஎப் ஐ.ஜி. சிந்து தலைமையில் கூடுதல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். எனவே அங்கு மாவோயிஸ்ட்கள் வேட்டை மேலும் தீவிரமடையும் என்று தெரிகிறது.

மாவோயிஸ்ட்கள் பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றனர். எனவே தான் வீரர்கள் உரிய பதிலடி கொடுக்க முடியவில்லை என்றும் துணை ராணுவப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜ்நாத் சிங் கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல் என்று கூறியுள்ளார்.

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங்கை தொடர்பு கொண்டு நிலைமையை தீவிரமாக கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கடந்த வாரமும் இதே பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 5 துணை ராணுவ படை வீரர்கள் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x