Last Updated : 12 Dec, 2014 08:53 AM

 

Published : 12 Dec 2014 08:53 AM
Last Updated : 12 Dec 2014 08:53 AM

டிஜிட்டல் உரிமம் தாமதத்துக்கு காரணம் என்ன?- தமிழக அரசு கேபிள் டிவிக்கு சிக்கல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிந்தித்தது போலவே, இப்போதைய நரேந்திர மோடி அரசும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் `டிஜிட்டல்’ உரிமம் வழங்கப் படாமல் இருப்பதாகக் கருதப் படுகிறது.

கடந்த செப்டம்பர் 2011-ல் தற்போதைய தமிழக அரசால் புனரமைக்கப்பட்டதாகக் கூறப் படும் `அரசு கேபிள் டிவி கார்ப்ப ரேஷன் லிமிடெட்’ நிறுவனம், கேபிள் டிவியின் டிஜிட்டல் உரிமம் கோரி, கடந்த 2012, ஜூலை 5-ம் தேதி மத்திய அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பித்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்றால் தமிழகத்தைப் போல் மற்ற மாநிலங்களும் அரசு கேபிள் டிவி தொடங்கி அது அரசியல்மயமாகிவிடும் எனக் கருதி, அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது. இதே பாணியில் மத்தியில் புதிதாக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி அரசும் தமிழக அரசுக்கு டிஜிட்டல் உரிமம் தரக் கூடாது எனக் கருதுவதாகக் கூறப்படுகிறது.

டிஜிட்டல் உரிமம் தராதது ஏன்?

இதுகுறித்து `தி இந்து’விடம் மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, `தமிழகத் துக்கு டிஜிட்டல் உரிமம் தருவ தால் மத்திய அரசுக்கு பல புதிய பிரச்சினைகள் உருவாகும். அதாவது, பாஜக ஆட்சி இல்லாத வேறு பல மாநிலங்களும் இது போன்று அனுமதி கோருவதுடன், அதை அரசியல் ஆயுதமாக மத்திய அரசுக்கு எதிராகவே பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, கடந்த ஆட்சியைவிட ஒருபடி மேலாக இந்த அரசு, தமிழகத்தின் அரசு கேபிள் டிவியை இழுத்து மூடுவதற்கான வழிகளைத் தேடுகிறது. இதனால்தான் டிஜிட்டல் உரிமம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்” என்றனர்.

பிரதமரான பிறகு நரேந்திர மோடியை கடந்த ஜூன் 3-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முதன் முதலாக சந்தித்தார். அப்போது, ஏற்கெனவே கோரியிருந்தபடி டிஜிட்டல் உரிமம் வழங்க வலியுறுத்தி மனு அளித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோரி வரும் நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் மத்திய நிதி மற்றும் செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம் வழங்கப்பட்டது.

சுமுக உறவு

இப்போது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓரளவுக்கு சுமுகமான உறவு நிலவுவதால் அரசு கேபிள் டிவி நிறுவனம் பிரச்சினையின்றி செயல் பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் மாறும் அரசியல் சூழல்களைப் பொறுத்து இந்த நிலை எந்த நேரமும் வேறுபடலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமிழகத்தின் அரசு கேபிள் நிறுவனம், மத்திய அரசிடம் பெற்ற அனுமதி கடந்த 2012-ல் காலாவதியாகி விட்டதாகவும், அதை நீட்டிக்க அல்லது புதிய அனு மதிக்கு வழியில்லாமல் டிராய் அளித்த பரிந்துரை தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி மத்திய அரசுக்கு டிராய் அளித்த தனது பரிந்துரையில் “அரசியல் அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் மற்றும் பொது நிதியில் செயல்படும் அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், நிறுவனங்கள், அரசுகளின் கீழ் இயங்குபவை, அரசு மற்றும் பொது கூட்டு முயற்சியாலான நிறுவனங்கள் ஆகியவை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி சேனல்களை கேபிள் மூலம் விநியோகம் செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபடக்கூடாது. ஒருவேளை ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

வழக்கை சந்திக்க தயார்

டிராய் அமைப்பின் இந்தப் பரிந்துரைகளை சுட்டிக்காட்டி டிஜிட்டல் உரிமம் அளிப்பதை மத்திய அரசு ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றால் அதை எதிர்கொள்வது குறித்தும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x