Published : 18 Dec 2014 10:46 AM
Last Updated : 18 Dec 2014 10:46 AM
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு, டெல்லியில் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாட்களுக்கு பின்பு முடிவுக்கு வந்தது.
மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
கர்நாடகத்தில் காவிரி அணையின் குறுக்கே அணைகளை கட்ட முயற்சிப்பதை எதிர்த்தும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், போராட்டக்காரர்களுக்கு பழச்சாறு கொடுத்து நேற்று போராட்டத்தை முடித்துவைத்தார்.
மத்திய அரசுக்கு எதிரானது அல்ல
போராட்டம் நடத்திய விவசாயிகள் இடையே அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: அதிக மழை பெய்து கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியதுபோக மீதம் வரும் உபரி நீர் மட்டுமே தமிழகத்துக்கு தரப்படுகிறது. நியாயப்படி தரவேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை என்றே கருதுகிறேன்.
தற்போது, அந்த உபரி நீரும் தமிழகத்துக்கு கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை எதிர்த்து இப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவர், நியாயத்தை உணர்ந்தவர். முல்லைப் பெரியாறு அணையில் கேரளத்தின் எதிர்ப்பையும் மீறி 142 அடி வரை தண்ணீரைத் தேக்குவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்.
கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளின் உணர்வுகளை பாரதிய ஜனதா கட்சி மதிக்கிறது. அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் கூறியதை நம்பி, தங்களின் போராட்டத்தை இப்போது நிறைவு செய்துள்ளனர். விரைவில் பிரதமரை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்வேன். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதன் பின்னர், ‘தி இந்து’ செய்தி யாளரிடம் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “மத்திய அரசு தமிழக மக்களுக்கு பாதகமாக நடந்து கொள்ளாது. காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT