Published : 27 Nov 2014 02:48 PM
Last Updated : 27 Nov 2014 02:48 PM

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 வீரர்கள் உட்பட 10 பேர் பலி - மற்றொரு பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி கைது

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நேற்று நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள், 3 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு பகுதிக்கு செல்ல உள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது:

ஜம்மு மாவட்டம் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக, தீவிரவாதிகள் சிலர் நேற்று காலையில் இந்திய பகுதிக்குள் ஊடுருவி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, காவல் துறையைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளை தேடினர்.

அப்போது எல்லையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பிண்டி கட்டார் கிராமத்தில் ராணுவத்தால் கைவிடப்பட்ட பதுங்கு குழியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு தீவிர வாதிகளும் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 தீவிரவாதிகள், 3 வீரர்கள், 3 பொதுமக்கள் என 10 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்பகுதியிலிருந்த ஒரு காரை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இது தீவிரவாதிகள் பயன்படுத்திய காராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பதுங்கி உள்ள சில தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஒரு தீவிரவாதி கைது

இதற்கிடையே, ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

காலை 6.30 மணிக்கு லாம் பட்டாலியன் பகுதியில் தீவிர வாதிகள் சிலர் நடமாடியதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர்களை விரட்டியடித்த பாது காப்புப் படையினர், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது ஒரு தீவிரவாதி பிடிபட்டான். அவனிடமிருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, பாகிஸ் தானில் தயாரிக்கப்பட்ட ஒரு பிஸ்டல் மற்றும் ரூ.8.100 மதிப்புள்ள பாகிஸ்தான் கரன்சி ஆகியவை கைப்பற்றப்பட்டன. அந்த நபரின் பெயர் அதுல் கயூமி என்ற பஞ்சாபி என தெரியவந்துள்ளது என்றார்.

ஒமர் அப்துல்லா இரங்கல்

உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தி னருக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள உதம்பூர், பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பாஜக-வுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x