Published : 07 Nov 2014 03:33 PM
Last Updated : 07 Nov 2014 03:33 PM

நான் சொன்னதைச் செய்வேன்: உ.பி.யில் கிராமத்தைத் தத்தெடுத்த மோடி பேச்சு

"பெரிய வாக்குறுதிகளை அள்ளிக்கொடுப்பவன் அல்ல நான். சிறிய திட்டங்களை சொன்னதைப் போல் செய்து காட்டுவதே என் வழக்கம்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயாப்பூர் என்ற கிராமத்தை, 'ஒரு எம்.பி., ஒரு கிராமம்' திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்தார். ஜெயாப்பூர் கிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தனது இலக்கு என்று கூறினார்.

‘எம்.பி. மாதிரி கிராமத் திட்டத்தை’ கடந்த சுதந்திர தின விழாவின்போது பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்திட்டத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 112-வது பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவை களில் உள்ள 790 எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எம்.பி.க்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு கிராமத்தையும் தத்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவரின் சொந்த ஊராகவோ, நெருங்கிய உறவினர்களின் ஊராகவோ இருக்கக் கூடாது.

அந்த வகையில், நரேந்திர மோடி இன்று, வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயாப்பூர் என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.

விழாவில் மோடி பேசியதாவது:

நிறைவேற்ற முடியாத பெரிய வாக்குறுதிகளை அள்ளிக்கொடுப்பவன் அல்ல நான். சிறிய திட்டங்களை சொன்னதைப் போல் செய்து காட்டுவதே என் வழக்கம். ஜெயாப்பூர் கிராமத்தை நான் தத்தெடுக்கவில்லை. அப்படிச் சொல்வதும் சரியல்ல. என்னைத்தான் ஜெயாபூர் வாசிகளான நீங்கள் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கிராமத்தை நான் தத்தெடுக்க பின்னணி இருப்பதாக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த ஊரைச் சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் இறந்துபோனதாக வெளியான செய்தியே. என்னை இந்த ஊரை தத்தெடுக்க தூண்டுதலாக இருந்தது.

இன்று நான் இந்த கிராமத்திற்காக மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிடுவேன் என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், நான் அப்படிச் செய்யப்போவதில்லை. பெரிய வாக்குறுதிகளை அள்ளிக்கொடுப்பவன் அல்ல நான். சிறிய திட்டங்களை சொன்னதைப் போல் செய்து காட்டுவதே என் வழக்கம்.

இந்த கிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செய்லபட வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாக கொள்வது ஆகியவற்றை கிராமவாசிகள் உறுதி மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜெயாபூர் கிராமத்தோடு இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயாப்பூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயாப்பூரை உருவாக்கி காட்டுகிறேன்" என்றார்.

நெசவாளர்களுக்கான வர்த்தக மையத்துக்கு அடிக்கல்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாராணசி சென்றார். அங்கு படாலால்பூர் என்ற இடத்தில் நெசவாளர்களுக்கான வர்த்தக மைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். வாராணாசி தொகுதி தனது இதயத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், " விவசாயத்திற்குப்பிறகு ஒரு துறை, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு தருகிறதென்றால் அது ஜவுளித்துறைதான். இந்த துறை, ஏழைகளிலும் ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது.

சமுதாயத்தின் அனைத்து பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் துறை இது. உலக சவால்களை சந்திப்பதற்காக ஜவுளித்துறையில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. அடுத்த தலைமுறை இந்த துறையில் பெருமையுடன் பணியாற்ற விரும்ப வேண்டும்" என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x