Last Updated : 14 Nov, 2014 10:15 AM

 

Published : 14 Nov 2014 10:15 AM
Last Updated : 14 Nov 2014 10:15 AM

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவராக குமாரசாமி நியமனம்: வாரிசு அரசியலில் தவறில்லை என்கிறார் தேவ கவுடா

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவராக முன்னாள் முதல்வர் குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வாரிசு அரசியலில் தவறு இல்லை என குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தப் பொறுப்பில் கிருஷ்ணப்பா கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் காலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக அந்த பொறுப்பு காலியாக இருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடாவின் செயல்பாடுகள் பிடிக்காததால் பலர் வேறு கட்சிக்கு தாவினர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேவகவுடா தலைமையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் கர்நாடக மாநில தலைவர், துணை தலைவர்கள், பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தேவ கவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கட்சியின் வளர்ச்சிக்காகவும், கர்நாடக மக்களின் நலனுக்காகவும் குமாரசாமிக்கு மாநில தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு, எதிர்வரும் தேர்தல்களில் அமோக வெற்றிபெறும் என நம்புகிறேன்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை தந்தை-மகன் கட்சி எனக் குறிப்பிடுவதை ஏற்க மாட்டேன். நாடு முழுவதும் பல மாநிலங்களில் தந்தையும், மகனும், மகளும், உறவினர்களும் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, என்னைப் பொறுத்தவரை வாரிசு அரசியல் தவறு இல்லை. வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தவறு செய்தால் மட்டுமே விமர்சிக்க வேண்டும்” என்றார்.

சிறப்பாக செயல்படுவேன்

இதனைத் தொடர்ந்து குமாரசாமி பேசும்போது, “கர்நாடகம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பேன். மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டு அதற்கு தீர்வு காண முயற்சிப்பேன். மீண்டும் மஜதவை ஆட்சிக்கு கொண்டுவராமல் ஓய மாட்டேன்” என்றார்.

கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக மஜத கட்சி தலைவராக பொறுப்பேற்ற குமாரசாமி, 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 2-ம் இடத்துக்குக் கொண்டு வந்தார். கடந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x