Last Updated : 30 Nov, 2014 10:38 AM

 

Published : 30 Nov 2014 10:38 AM
Last Updated : 30 Nov 2014 10:38 AM

எந்தக் கட்சியிலும் சேராமல் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்: நடிகர் ராஜ்குமாரின் நினைவக திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ராஜ்குமாரின் கலைச் சேவையை போற்றும் வகையில் பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அவருக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 800 பேர் அமரக்கூடிய திறந்த நிலை திரையரங்கம், குளம், அழகிய தோட்டம், 3 அடி உயர முள்ள ராஜ்குமாரின் சிலை, புகைப்பட கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

‘ராஜ்குமார் புண்ணிய பூமி' என பெயரிடப்பட்டுள்ள இந்த நினைவகத்தை க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்து பேசினார்.

முதல்வர் கண்தானம்

விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: நடிகர் ராஜ்குமார் தனது ரசிகர்களுக்கு கண்தானம் செய்வது, மரம் நடுவது குறித்து அறிவுரை வழங்கினார். இதனால் 90 ஆயிரத்திற்கும் அதிகமாக ரசிகர்கள் கண்தானம் செய்துள்ளனர். ரசிகர்களுக்கு கூறியதை தானும் கடைப்பிடிக்கும் வகையில் ராஜ்குமாரும் கண் தானம் செய்தார்.

அவரது மரணத்துக்குப் பிறகு அவருடைய சக்தி வாய்ந்த‌ கண்கள் பார்வையிழந்தவருக்கு பார்வை அளித்தன. எனவே ராஜ்குமாரின் நினைவாக இன்று நானும் எனது கண்களை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கான ஆவணங்களில் இன்றே கையெழுத்திடுகிறேன். என்னைப் போல கர்நாடகம் முழுவதும் இருக்கும் அனைவரும் கண் தானம் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், மூத்த நடிகை சரோஜா தேவி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

1927-ம் ஆண்டு பிரம்மா அற்புதமான தேன் ஒன்றை உருவாக்கி, அதை மேகத்தில் மூடி வைத்தார். அந்த தேனை கலைகளின் தலைவி சரஸ்வதி ஆசிர்வாதம் செய்தார். மேகம் குளிர்ந்து அந்த தேன் மழை எங்கு பெய்யும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கர்நாட கத்தில் அந்த புண்ணிய தேன் மழை பெய்தது. 1954-ம் ஆண்டு திரையுல‌கில் நுழைந்த அந்த தேன் மழையின் பெயர் ராஜ்குமார்.

தனது 54 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் புரந்தரதாசர், கனகதாசர் உள்ளிட்ட ஞானிகள் வேடத்திலும் ராவணன், இரணியன், மகிஷாசூரன் போன்ற அரக்கர்கள் வேடத்திலும், ஜேம்ஸ்பாண்ட் போன்ற வெளிநாட்டுக்காரர்கள் வேடத்திலும் ராஜ்குமார் நடித்துள் ளார். ராஜ்குமாருக்குப் பிறகு இந்த ஞானிகளும், அரக்கர்களும் ரஜினிகாந்த் உட்பட எந்த நடிகர் களையும் தேர்வு செய்யவில்லை. ஓடி ஓடி களைப்படைந்த ராஜ்குமார் என்கிற குதிரை தனது தாய் மண்ணில் ஓய்வெடுக்கச் சென்றது. அப்போது அந்த குதிரையை வன தேவதையும் பார்க்க விரும்பினாள். அதனால்தான் அவள் 108 நாட்கள் (சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்திய சம்பவம்) ராஜ்குமாரை தன்னுடன் வைத்திருந்தாள்.

எனக்கு 11 வயது இருக்கும் போது, எனது பள்ளிக்கு பக்கத்தில் இருந்த சனி பகவான் கோயிலுக்கு ராஜ்குமார் வந்தார். அப்போது முட்டிமோதி அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கினேன். அவரைத் தவிர இதுவரை வேறு யாரிடமும் நான் ஆட்டோகிராப் வாங்கியதில்லை.

ஒருமுறை நானும் அவரும் நடைப்பயிற்சி செய்யும்போது ஆட்டோ ஓட்டுநரில் தொடங்கி காய்கறி வியாபாரி வரை அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். பெண்கள், குழந்தைகள் முதல் அனைவரும் ராஜ் குமாருக்கு வணக்கம் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இத் தனை பேரும் ஒருவரை மதித்து வணங்குவார்களா என ஆச்சர் யத்தில் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், “அவர்கள் வணக்கம் தெரிவிப்பது எனக்கல்ல. எனக்குள் மறைந்திருக்கும் கலாதேவிக்கு. கலைஞர்களுக்கு கிடைக்கும் புகழ், மரியாதை, பெருமை எல்லாம் கலாதேவிக்கானது” என்றார். மிகவும் எளிமையாக, அடக்க மாக வாழ்க்கை நடத்திய ராஜ்குமார் ஒரு நடிகராக, மகனாக, கணவராக, தகப்பனாக, தாத்தாவாக, பொறுப்புள்ள குடிமகனாக தனது கடமையை செய்துள்ளார்.

எந்தக் கட்சியிலும் சேராமல், அரசியல் ஈடுபாடு இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதை தனது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் ராஜ்குமார். இங்குள்ள நினைவிடத்தில் ராஜ்குமார் என்ற யோகி, முனிவர், ரிஷி உறங்கிக் கொண்டிருக்கிறார். இன்று நினைவிடமாக இருக்கும் இந்த இடம் நாளை கோயிலாக மாறும். அமைதியை தேடி இங்கே வரும் ரசிகர்களுக்கு நிச்சயம் அவரது ஆசி கிடைக்கும்” என்றார்.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு கர்நாடகம் இடையே பிரச்சினை நீடிக்கும் நிலையில், இவ்விழாவில் கர்நாடக முதல்வருடன் ரஜினிகாந்த் பங்கேற்றிருந்தார். ஆனால் என்ன பேசுவார் என்ற ஆவல் இருந்தது. ஆனால் ராஜ்குமாரை தவிர அவர் வேறு எதையும் பேசாதது, செய்தியாளர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

நினைவகம் திறப்பு விழாவை தொடர்ந்து நட்சத்திர கலைவிழா நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x