Published : 28 Nov 2014 05:28 PM
Last Updated : 28 Nov 2014 05:28 PM
முதற்கட்ட வாக்குப்பதிவில் திரளாக வாக்களித்து துப்பாக்கி தோட்டாக்களுக்கு ஜம்மு மக்கள் பதிலளித்து ஜனநாயகத்தை நிரூபித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சி ஏற்படுத்தாமல் உணர்ச்சிகரமான பயமுறுத்தலின் மூலம் மாநிலத்தை ஆளும் கட்சி கொள்ளையடிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடந்து வருகிறது. இதன் 2-ஆம் கட்ட தேர்தல் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஷ்மீரின் உதம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி கடந்த 30 வருடங்களாக தேக்கமடைந்துள்ளது. இங்கிருக்கும் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் வளர்ச்சி ஏற்படுத்தாமல் உணர்ச்சிகரமான பயமுறுத்தலின் மூலம் மாநிலத்தையே கொள்ளையடித்து வருகின்றனர்.
ஆனால் தற்போது அதனை உணர்ந்த நீங்கள் முதற்கட்ட வாக்குப்பதிவில் அசம்பாவிதங்களையும் மீறி திரலாக வந்து வாக்களித்து ஜனநாயகத்தின் மேன்மையை நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் துப்பாக்கி தோட்டாக்களுக்கு வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்துவிட்டீர்கள்.
நமது தேசத்தை இதுவரை எத்தனை பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் ஒருவரும் என்னை போல் இங்கு வந்தது இல்லை. பிரதமராக பதவியேற்ற குறுகிய காலத்தில் இங்கு நான் அதிகமான முறைகள் வந்துவிட்டேன். இனியும் பலமுறை உங்களை சந்திக்க வருவேன். உங்களது வருத்தத்தை தீர்க்க நான் வழி செய்வேன்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உங்களுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக நான் இங்கு வந்தேன். அரசியல் ஆதாயத்துக்காகவோ வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்ளவோ நான் இங்கு வரவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நான் 5 வருடங்களில் செய்து காட்டவில்லை என்றால், அதற்கு நான் பொறுப்பு ஏற்பேன். அப்படி நடக்காவிட்டால் நீங்கள் என்னை நேரடியாக கேள்வி கேட்கலாம். காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் முதன்மையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும். அதற்கு எனக்கு உங்களுடைய உதவி தேவை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT