Published : 14 Nov 2014 10:12 AM
Last Updated : 14 Nov 2014 10:12 AM

வீடற்றவர்களுக்கு தங்குமிடம்: மாநில அரசுகளுடன் ஆலோசிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவதற்கு 10 நாட்களுக்குள் மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று கூறியதாவது:

நகர்ப்புறங்களில் வீடில்லாத மக்களுக்கு, தற்காலிக தங்குமிடம் வழங்குவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவதற்காக, மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இது நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பு.

இக்கூட்டம் 10 நாட்களுக்குள் நடத்தப்பட்டு, இதுவரை மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். தலைநகர் டெல்லியில் வீடில்லாதவர்கள் தொடர்பான விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. ஆகவே, அதனை இந்த அமர்வு கவனத்தில் கொள்ளாது.

ஏழை, ஆதரவற்ற, மோசமான நிலையிலுள்ள மக்களின் உயிர் களைப் பாதுகாப்பதைத் தவிர அரசுக்கு முக்கியமான வேறு பணி எதுவும் இல்லை. வீடில்லாத மக்கள், தெருவோரங்களில் வசிக் கும் போது அவர்கள் அதிகபட்ச அபாயத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, குளிர்காலத்தில் வட இந்தியாவில் வீடில்லாத மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, குளிர்காலம் நெருங்கியுள்ள நிலையில் வீடில் லாதவர்களுக்காக, போதுமான தற்காலிக இருப்பிடங்களை உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் அமைக்க வேண்டும். தவறினால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x