Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 3 இடம்தான் கிடைக்கும் என உத்தரப்பிரதேச தேர்தல் சூதாட்டக்காரர்கள் கோடிக்கணக்கில் பந்தயம் கட்டியுள்ளனர்.
கிரிக்கெட்டில் தொடங்கி, இந்தப் பருவ காலத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பது வரை, பணம் கட்டி சூதாடுவது உ.பி.யின் மேற்குப் பகுதிவாசிகளுக்கு வழக்கம். இந்தவகையில் அவர்கள், மக்களவை தேர்தலையும் விட்டுவைக்கவில்லை. உ.பி.யின் முக்கியத் தொகுதிகளில் வெல்வது யார் என இவர்கள் பணம் கட்டி ரகசியமாக சூதாடுகின்றனர்.
இம் மாநிலம் மட்டுமன்றி, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கும் வாரணாசி தொகுதியில் பல கோடி ரூபாய் சூதாட்டத் தொகையாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அலிகரின் தேர்தல் சூதாட்ட வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், “வெற்றி வாய்ப்பு மோடிக்கு சாதகமாக இருப்பினும், இரண்டாவது இடம் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்குதான் கிடைக்கும். வாரணாசியில் உள்ள ஜாதி, மத வாக்குகள் இவருக்கு சாதகமாகஇருப்பதே இதற்கு காரணம். இதனால் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 3-வது இடம்தான் கிடைக்கும் என அதிகமானோர் பந்தயம் கட்டியுள்ளனர்” என்றனர்.
“தேசிய அளவில் பல முக்கியத் தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை இக்கட்சி தட்டிப்பறிக்கும்” என்றும் இவர்கள் கருத்து கூறுகின்றனர். தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் நோக்கர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை விட இந்த சூதாட்டக்காரர்களின் கணிப்பு ஏறக்குறைய 100 சதவீதம் சரியாக இருக்கும் என உ.பி.வாசிகள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT