Published : 10 Nov 2014 09:37 AM
Last Updated : 10 Nov 2014 09:37 AM
மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் எம்.வி.ராகவன் (81) நேற்று மறைந்தார். மேலத் வீட்டில் ராகவன் 1933ம் ஆண்டு மே 5ம் தேதி கண்ணூர் மாவட்டத்தின் பப்பினாஸேரி எனும் இடத்தில் பிறந்தார். ஆரம்ப நிலைப் பள்ளியோடு இடை நின்ற இவர், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்.
1964ம் ஆண்டு கட்சி இரண்டாக உடைந்தபிறகு, மூன்றாண்டுகள் கழித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
கட்சி மூலமாக 1970, 1977,1980 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 1986ம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று தனிக் கட்சியைத் தொடங்கினார்.
பின்னர் ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி வைத்து, தேர்தல்களைச் சந்தித்தார். 1991-96 மற்றும் 2001-06 ஆகிய ஆண்டுகளில் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்ட இவர், தான் நிறுவிய பரியாரம் கூட்டுறவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.
இவரது மறைவுக்கு, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT