Published : 02 Nov 2014 11:19 AM
Last Updated : 02 Nov 2014 11:19 AM
ஜார்க்கண்டில் சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்துக் கொண்டது. இதனால் அங்கு 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து நேற்று முன் தினம் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தியது.
அதன் பிறகு ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.கே.ஹரி பிரசாத், கூட்டணிக் கட்சிகளின் பெயர்களை அறிவித்தார். அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பெயர் இடம்பெறவில்லை. இதன்மூலம், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அங்கு ஆட்சி அமைப்பதற்காக உருவான காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறிந்து விட்டது.
மராண்டியுடனும் கூட்டு இல்லை
பிஹாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு 6-ல் வெற்றி பெற்றன. இதனால் உற்சாகமான காங்கிரஸ், அதே கூட்டணியுடன் ஜார்க்கண்டிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணியில் சேர விரும்பியது. ஆனால் அதையும் காங்கிரஸ் ஏற்க மறுத்து விட்டது.
ஜார்க்கண்டில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களைப் போல், வாக்குகள் பிரிவதால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு மேலும்அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்டின் 14 தொகுதிகளில் பாஜகவுக்கு 40.1 சதவீத வாக்குகளுடன் 12-ல் வெற்றி பெற்றது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு கிடைத்தது. காங்கிரஸுக்கு வெறும் 13.3 சதவீத வாக்குகள் கிடைத்தும் ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.
காங்கிரஸ் ஆதரவுடன் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கும் ஜார்க்கண்டில் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், பாஜக 17, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 15, காங்கிரஸ் 12, ராஷ்ட்ரிய ஜனதா 5, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் ஜார்க்கண்ட் மாணவர் கட்சிகள் தலா 6, ஐக்கிய ஜனதா தளம் , சிபிஐ (எம்.எல்.) மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலா 2 இடங்களைப் பெற்றுள்ளன. மீதம் உள்ளவைகளில் மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை 5 பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT