Published : 07 Nov 2014 11:37 AM
Last Updated : 07 Nov 2014 11:37 AM

சிறுமிக்கு பேட்டியளித்த மகாராஷ்டிரா முதல்வர்

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 11 வயது சிறுமி ஒருவருக்குப் பேட்டி அளித்துள்ளார். அந்தச் சிறுமி வீட்டுப் பாடம் செய்ய‌ உதவுவதற்கு அவர் மேற்கொண்ட இந்த முயற்சி அவரின் தாராள மனத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் திரிஷ்டி ஹர்சந்திராய் (11). இவர் அங்குள்ள ஜே.பி.பெடிட் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் தற்போது தங்கியுள்ள சாயாத்ரி விருந்தினர் மாளிகைக்கு அருகில் இந்தச் சிறுமி வசித்து வருகிறார்.

இவர் தன்னுடைய பள்ளி தனக்கு அளித்த வீட்டுப் பாடத்தின் ஒரு பகுதியாக மாநில முதல்வரைப் பேட்டி காண வேண்டியிருந்தது. இதற்காக அவர் முயற்சித்த போது விருந்தினர் மாளிகையின் பாதுகாவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய பாடப் புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து அதில் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "உங்களைச் சந்திக்க முயற்சித்தபோது பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே இக்கடிதம் எழுதுகிறேன். இந்தக் கடிதம் கிடைத்தவுடன் இதில் இருக்கும் கைப்பேசி எண்ணுக்கு அழைக்கவும். நான் உங்களைப் பேட்டி காண வேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் தன்னை அழைத்துச் செல்வதற்கு யாரேனும் அதிகாரிகள் வந்தால் அவர்கள் தன் வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக முகவரியையும் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் தனக்குக் கிடைத்த அதே நாளில் தான் நாக்பூருக்குச் செல்வதற்கு முன்பாக அந்தச் சிறுமியை அழைத்து பட்னாவிஸ் பேட்டி அளித்துள்ளார்.

முதல்முறையாக முதல்வர் பதவி ஏற்றுள்ள பட்னாவிஸும் ஐந்து வயது சிறுமிக்குத் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x