Published : 10 Nov 2014 10:25 AM
Last Updated : 10 Nov 2014 10:25 AM

புதிய அமைச்சர்களின் பின்னணி

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச் சரவை விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ள 21 உறுப்பினர்களில் முக்கியமானவர்களின் பின்னணி வருமாறு:

ஜே.பி.நட்டா

மத்திய உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பாரதிய ஜனதாவின் அடுத்த தலைவர் பதவிக்கு பேசப்பட்டவர் 53 வயது நட்டா. பிறகு அமித் ஷாவால் வாய்ப்பை இழந்த இவர், பிஹாரில் பிறந்து தனது இளமை காலத்திற்கு பின் இமாச்சல பிரதேசம் வந்தவர். இங்கு மூன்றுமுறை எம்.எல்.ஏ. மற்றும் மாநில அமைச்சராகவும் இருந்தவர். மோடி மற்றும் அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் நட்டா, கட்சி மற்றும் அரசின் இடையே பாலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுத்ரி வீரேந்தர் சிங்

ஹரியாணாவின் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்தவர், மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பாக திடீர் என பாஜகவில் இணைந்து எம்பியானார். ஜாட் சமூகத்தினர் அதிகமாக இருக்கும் ஹரியாணாவில் புதிய முதல்வராக வேறு சமூகத்தைச் சேர்ந்த ராம் மனோகர் கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதை சமன் செய்யும் பொருட்டு வீரேந்தருக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

ராஜீவ் பிரதாப் ரூடி

விமானியான இவர், வாஜ்பாய் அரசில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். பிஹாரில் லாலுவின் மனைவி ராப்ரி தேவியை தோற் கடித்தவர். பிஹாரில் அடுத்த ஆண்டு நடை பெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அவர் சார்ந்த ராஜ்புத் சமூகத்தின் வாக்கு களை பெற அமைச்சராக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மோடிக்கு நெருக்கமானவ ரான ரூடி, மகாராஷ்டிராவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். தமிழக பாஜகவின் மத்திய பொறுப்பாளராகவும் ரூடி அமர்த்தப்பட்டுள்ளார்.

ராம்கிருபாள் யாதவ்

லாலுவின் முன்னாள் நெருங்கிய சகாவான இவர், தமக்கு மக்களவையில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் ராஷ்டிரிய ஜனதாவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவர். லாலுவின் மகளான மிசா பாரதியை தோற்கடித்தவர். அங்கு யாதவ சமூகத்து வாக்குகளை பெற பயன் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிராஜ் சிங்

மோடியை எதிர்த்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரை கடுமை யான விமர்சனம் செய்தவர் இவர். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தான் சென்றுவிடுங்கள் என பேசி சர்ச்சையில் சிக்கியவர்.

முக்தர் அப்பாஸ் நக்வி

15 வருடங்களுக்கு பின் மீண்டும் அமைச்ச ராகி இருக்கும் இவர், பாஜகவின் ஷியா பிரிவு முஸ்லிம் முகமாகக் கருதப்படுபவர். இவரது வரவால் மற்றொரு முஸ்லிம் தலைவ ரான ஷாநவாஸ் உசைன் அமைச்சரவையில் வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கூறப் படுகிறது.

சாத்வி நிரஞ்சன் ஜோதி

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் பெண் சாது. மோடியின் முதல் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரே பெண்ணான ஜோதி இருமுறை பாஜக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். ஜோதியை அமைச்சராக்கியது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பயன் அளிக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த ஜூனில் 3 பேர் கும்பல் இவரை கொல்ல முயன்றபோது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஜெயந்த் சின்ஹா

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகனான இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அடிக்கடி புதிய யோசனைகளை கூறும் ஜெயந்த், மோடியின் மனதைக் கவர்ந்தவர். இவரை மத்திய அமைச்சராக்கியதன் மூலம் ஜார்க்கண்ட் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை முதல்வர் போட்டியில் இருந்து பாஜக விலக்கி விட்டதாகக் கருதப்படுகிறது.

விஜய் சாம்ப்லா

சுமார் 10 ஆண்டுகள் சவூதி அரேபியாவில் கீழ்நிலை பணியாளராக விஜய் சாம்ப்லா பணியாற்றினாராம். பஞ்சாபின் தலித் சமூகத்தை சேர்ந்த அவர் அங்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இருக்கும் வாக்குகளைப் பெற பயன் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சர்கள் பட்டியல்

புதிய அமைச்சர்கள் பதவியேற்றதன் மூலம் மத்திய அமைச்சரவையின் பலம் 66 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் பட்டியல் வருமாறு:

கேபினட் அமைச்சர்கள்

மனோகர் பாரிக்கர்

சுரேஷ் பிரபு

வீரேந்தர் சிங்

ஜே.பி.நட்டா

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

பண்டாரு தத்தாத்ரேயா

ராஜீவ் பிரதாப் ரூடி

மகேஷ் சர்மா

இணை அமைச்சர்கள்

முக்தர் அப்பாஸ் நக்வி

ஹரிபாய் பார்திபாய் சவுத்ரி

சன்வர் லால் ஜாட்

பாபுல் சுப்ரியா

ராம் கிருபாள் யாதவ்

ராஜ்யவர்தன் ரத்தோர்

ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்

ராம் சங்கர் கத்தாரியா

கிரிராஜ் சிங்

சாத்வி நிரஞ்சன் ஜோதி

மோகன்பாய் கல்யாண்ஜி பாய் குண்டாரியா

ஒய்.எஸ். சவுத்ரி

ஜெயந்த் சின்ஹா

விஜய் சம்ப்லா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x