Last Updated : 14 Jul, 2019 02:36 PM

 

Published : 14 Jul 2019 02:36 PM
Last Updated : 14 Jul 2019 02:36 PM

பாஜக பொதுச்செயலாளர் ராம்லாலை தம் அமைப்புக்கு திரும்ப அழைக்க ஆர்எஸ்எஸ் முடிவு: கருத்து வேறுபாடு காரணமா?

தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கிற்கு (ஆர்எஸ்எஸ்) திரும்ப உள்ளார் பாஜகவின் பொதுச்செயலாளரான ராம்லால். இதன் பின்னணியில் இவ்விரு அமைப்புகளுக்கு இடையே உருவான கருத்து வேறுபாடு காரணமாகக் கூறப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவாக இருப்பது பாஜக. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பெரும்பாலான முக்கியத் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து கட்சிக்கு வந்தவர்கள். இந்தவகையில், தம் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்லாலையும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் மூத்த பொதுச்செயலாளராக அனுப்பி இருந்தது. ஆனால், தாம் எதிர்பார்த்தபடி ராம்லாலின் உழைப்பை பாஜக பயன்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ராம்லாலை தம் தாய் அமைப்பிற்கு திரும்ப அழைத்துக்கொள்ள ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. தற்போது விஜயவாடாவில் மூன்று நாள் நடைபெற்ற அதன் பிராந்தியப் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்புப் பிரிவின் தலைவரான அருண் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது,  ''ராம்லாலுக்கு இனி பாஜகவில் எந்தப் பொறுப்புகளும் கிடையாது. இனி அவர் நமது தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக செய்தித் தொடர்பு பணியில் இருப்பார்.

இனி அவருக்கு பதிலாக புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பது பாஜகவின் விருப்பம். எங்கள் வழக்கமான முடிவுகளில் ஒன்றான இதன் பின்னணியில் எந்த குறிப்பிட்ட காரணங்களும் கிடையாது'' எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் மேற்குப்பகுதிக்கு ஆர்எஸ்எஸ் பொறுப்பாளராக இருந்தவர் ராம்லால். கடந்த 2006-ல் பாஜகவின் பொதுச்செயலாளராக (நிர்வாகம்) இருந்த சஞ்சய் ஜோஷிக்கு பதிலாக ராம்லால் அமர்த்தப்பட்டிருந்தார். மிகவும் முக்கியமான இந்தப் பொறுப்பு கட்சிக்கும் அதன் தாய் அமைப்பிற்கும் இடையே பாலாமாக இருந்து செயல்படுவது ஆகும். இந்தப் பதவிக்கு கடந்த காலங்களில் சுந்தர் சிங் பண்டாரி, கே.என்.கோவிந்தாச்சார்யா மற்றும் சஞ்சய் ஜோஷி உள்ளிட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் அனுப்பப்பட்டவர்கள்.

அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இந்த முக்கிய சமயத்தில், ராம்லால் வாபஸ் பெற்ற திடீர் நடவடிக்கை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''பாஜகவின் தலைவரான அமித் ஷாவின் தலையீடுகளால் பல நிர்வாகிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், முன்பிருந்தது போலான உறவு எங்களுடன் பாஜகவுடன் குறைந்து வருகிறது.

2014-ல் பாஜக தலைவராக ஜே.பி.நட்டாவை பரிந்துரைத்த போது அமித் ஷா நியமிக்கப்பட்டார். இந்தமுறை, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை சிபாரிசு செய்தால் நட்டாவை அமர்த்த முயல்கிறது பாஜக. பாஜகவிற்கு மீண்டும் கிடைத்த வெற்றி என்பது எங்கள் அமைப்பினால் தான் என்பதை அதன் முக்கியத் தலைவர்கள் மறப்பது சரியல்ல'' எனத் தெரிவித்தனர்.

அரசியல் நடவடிக்கைகளில் சிறந்த நிர்வாகியாகக் கருதப்படுபவர் ராம்லால். இவரை வாபஸ் பெறும் ஆர்எஸ்எஸ் முடிவால், புதிய பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x