Published : 02 Jul 2019 02:41 PM
Last Updated : 02 Jul 2019 02:41 PM
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் இன்று சந்தித்தனர். அப்போது எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பிரச்சினை உள்ளிட்ட 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இந்த மனுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான ரவிக்குமார் குறிப்பிட்டிருப்பதாவது:
''டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் கோரியதன் பேரில் ஆங்கிலேயர் காலம் முதல் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பட்டப்படிப்பு கல்விக்கான உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தேவைப்படும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இது, கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு அதன் நிலுவைத்தொகை சுமார் 11,000 கோடி ரூபாயாக உள்ளது. இதனால், அச்சமூக மாணவர்களின் கல்விக்கு எதிரான சூழலை உருவாக்கி விட்டது.
இதை உடனடியாக வழங்கி அந்த உதவித்தொகையைத் தொடர வேண்டும். மத்திய பட்ஜெட்டில் துணை திட்டங்களில் பட்டியலினத்தவருக்கு ரூ.1,11,780,33 கோடியும், பழங்குடியினத்தவர்களுக்கு ரூ.48,108,04 கோடியும் குறைவாக வழங்கப்பட்டன.
இதை சமர்ப்பிக்கவிருக்கும் பட்ஜெட்டில் அவ்விரு சமூக மக்கள்தொகைக்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கான போதுமான நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது. இதைச் சமாளிக்க உதவும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளிக்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும்''.
இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, அடிப்படை ஊதியத்தில் ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு உள்ளிட்ட பலவும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரவிக்குமாரின் விழுப்புரம் தொகுதி மற்றும் தமிழகத் திட்டங்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
விழுப்புரத்தில் நகைத் தொழிலாளர்களுக்கான பூங்கா மற்றும் உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் தொடங்க கோரப்பட்டுள்ளது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் ஆகியவை தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் இடம்பெற்ற விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் தனியாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் நிர்மலாவிடம் அளித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT