Last Updated : 03 Jul, 2019 12:00 AM

 

Published : 03 Jul 2019 12:00 AM
Last Updated : 03 Jul 2019 12:00 AM

அழிவுப் பாதையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்: சட்டப்பேரவையில் அமைச்சர் வாக்குறுதிக்கு பின்னும் இயக்குநர் அமர்த்தப்படவில்லை

தொடக்கம் முதல் இயக்குநர் அமர்த்தப்படாமல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு அழியும்நிலை தொடர்கிறது. இப்பதவி ஆறு மாதங்களில் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கல்வி அமைச்சர் உறுதியளித்தும் அதற்கான விளம்பரம் இதுவரை அளிக்கப்படாமல் உள்ளது.

மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் 2004 ஆம் ஆண்டு தமிழ்மொழி இடம்பெற்றது. பிறகு அப்போதைய முதல்வரான மு.கருணாநிதியால் அதன் வளர்ச்சிக்காக 2006-ல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் நிர்வாகக்குழுவுக்கு நிரந்தரத் தலைவராக தமிழக முதல்வராக வருபவர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதல்வரின் பரிந்துரைகள், ஆலோசனைகளின் ஏற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இயக்குநர், நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும். ஆனால், இதற்கு தொடக்கம் முதல் கடந்த 14 ஆண்டுகளாக நிரந்தர இயக்குநர் அமர்த்தப்படாமல் உள்ளது. இதனால், அதன் நிர்வாகத்தில் முறையான கவனம் செலுத்தப்படாமல் அது அழிவுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தி ‘இந்து தமிழ்’ நாளேட்டில் கடந்த வருடம் ஏப்ரல் 11, இந்த வருடம் பிப்ரவரி 13 ஆகிய தேதிகளில் வெளியானது. இதை ஆதாரமாக்கிய எதிர்க்கட்சிகள் தமிழக சட்டப்பேரவையில் அப்பிரச்சினையை எழுப்பின. அதற்கு பதிலளித்த தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், ’இன்னும் ஆறு மாதங்களில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் அமர்த்தப்படுவார்’ என உறுதி அளித்தார்.

எனினும், அதற்கு முறையான விளம்பரம் கூட இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. இது வெளியாகி சுமார் எட்டு வாரங்களுக்கு பின் அதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்படவேண்டும். இந்த அனைத்தும் முடிய இன்றுமுதல் கணக்கிட்டாலும் இன்னும் நான்கு மாதம் தேவைப்படும். தற்போது அமைச்சர் அளித்த உறுதிமொழி முடிந்து நான்கு மாதங்களாகி விட்டது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘இயக்குநர் பதவியை மத்திய அரசுதான் நிரப்ப வேண்டுமே தவிர, தமிழக அமைச்சர் அதை செய்ய முடியாது. இப்பதவி உள்ளிட்ட அலுவலர்கள் அமர்த்தப்படாமல் இருக்க நாங்கள் காரணம் அல்ல.

இதற்கானத் தேர்வுக்குழுவின் உறுப்பினர்களை பரிந்துரைக்க தமிழக முதல்வர் தாமதம் செய்ததால் எங்கள் இணையதளத்தில் மட்டும் விளம்பரம் செய்துள்ளோம். அலுவலர்களுக்கான 51 பணியிடங்களில் 11-க்கு நீதிமன்ற தடையும் உள்ளது’ எனத் தெரிவித்தன.

இயக்குநர் பதவிக்காக ஏற்கனவே இரண்டு முறை நேர்முகத்தேர்வு நடத்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான உத்தரவு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. சுமார் 150 நிரந்தர அலுவலர்கள் அமர்த்தப்பட வேண்டிய இடத்தில் வெறும் 40 பேர் தொகுப்பு ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர்.

தொடக்கத்தில் இருந்த 16 மூத்த ஆய்வறிஞர்களில் இப்போது ஒருவர் கூட இல்லை. இந்த அவலநிலையின் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தி எதிர்ப்பு மாநிலம் என்பதால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை எனவும், திமுக தலைவரால் தொடங்கப்பட்டது என அதன் மீது அதிமுக அரசு பாராமுகம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழாய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றிய முனைவர் எஸ்.மனோகரன் கூறும்போது, ‘இந்நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநரான திருச்சி என்ஐடி-யின் பதிவாளர் ஏ.பழனிவேல் செய்த குளறுபடிகள் மீது பிரதமருக்கும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் புகார் அளித்துள்ளேன்.

இவரைபோல், பொறுப்பு இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட ஆறுபேரில் ஒருவருக்கும் இயக்குநர் பணிக்காக மத்திய அரசு நிர்ணயித்த தகுதி இருந்ததில்லை. தமிழிலும் பட்டம் பெறாதவர்களுக்கு, முறையான தகுதியின்றியே மத்திய அரசு பொறுப்பு அளிக்கிறது. இதனால், அவர்கள் புரிதல் இன்றி அதன் தமிழாய்வுகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கி உள்ளன. இவ்வாறு, செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழாய்வு நிறுவனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x