Published : 09 Jul 2019 07:48 AM
Last Updated : 09 Jul 2019 07:48 AM
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைதளக் கணக்குகளை பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்த உத்தரவை சுமார் 900 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர்கல்விப்பிரிவு அனுப்பி உள்ளது. இதில், மாணவர்களின் சமூகவலைதளக் கணக்குகளையும் மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் இணைக்கக் கோரியுள்ளது.
இத்துறைக்கு சமூகவலைதளங்கள் அனைத்திலும் கணக்கு ஏற்கெனவே துவங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் கணக்குகளை சேர்ப்பதால் அதில் பதிவாகும் நற்பணிகள் பற்றி அரசு அறிய விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. கணக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கல்வி நிறுவனம்பற்றிய நல்ல செய்திகளை வாரத்தில் ஒன்றாவது பதிவிடச் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கணக்கு இல்லாதவர்கள் தொடங்க வேண்டியது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்பாக இணைக்க வேண்டும் எனவும் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த மூன்று சமூகவலைதளங்களில், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு ஏற்கெனவே கணக்குகள் உள்ளன.
ஆனால், மாணவர்களின் சுதந்திரமான சிந்தனையில் மத்திய அரசு தலையிடும் வாய்ப்புகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ரஜீப் ராய் கூறும்போது, ‘இதன்மூலம் மாணவர்களின் முழு நடவடிக்கையையும் கண்காணித்து அவர்களை மத்திய அரசு மிரட்டி தனது ஆளுமையின் கீழ் கொண்டுவர முயலும் வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்த்து உயர்கல்வி நிறுவன இணையதளத்தில் கல்வி நிறுவனங்களும், மாணவர்களும் தங்கள் நற்பணிகளை பதிவிடும் வாய்ப்பை உருவாக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் ‘கேம்பஸ் இண்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்முகத் தேர்வுகளில் மாணவர்களின் முகநூல் பக்கங்களை கண்காணிப்பதையும் பல நிறுவனங்கள் தொடங்கி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT