Published : 13 Jul 2019 08:35 AM
Last Updated : 13 Jul 2019 08:35 AM
தமிழக எம்.பி.க்கள் வேண்டுகோளை ஏற்ற சபாநாயகர், கடிதத்தை ஆங்கிலத்திலும் அனுப்பி பாராட்டை பெற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த ஜூலை 8-ம் தேதியிட்ட சபாநாயகரின் அழைப்புக் கடிதம் இந்தியில் மட்டும் எழுதப்பட்டிருந்தது. இதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழகம் உள்ளிட்ட தென்மாநில எம்.பி.க்கள் பலரும் தவித்தனர். இதனால், அதிருப்திக்கு உள்ளானவர்களில் சிலர் அக்கடிதத்தை ஆங்கிலத்தில் அளிக்கும்படி சபாநாயகர் பிர்லாவிற்கு கடிதம் எழுதினர். இதுகுறித்த செய்தி நேற்று முன்தினம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிலும் வெளியானது.
இந்நிலையில், அதேதினம் மாலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அந்தக் கடித நகலை ஆங்கிலத்திலும் எழுதி எம்.பி.க்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் விழுப்புரம் தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான டி.ரவிகுமார் கூறும்போது, ‘‘இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் எங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படும் வழக்கம் உள்ளது. ஆனால், கடந்த புதன்கிழமை சபாநாயகர் இந்தியில் மட்டும் எழுதியது பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதை குறிப்பிட்டு நானும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அளிக்கும்படி அவருக்கு கடிதம் எழுதி கோரி இருந்தேன். இதை அவர் பெருந்தன்மையுடன் ஏற்றது பாராட்டுக்குரியது’’ எனத் தெரிவித்தார்.
வரும் அக்டோபர் 2-ல் காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஜூலை 13, 14-ல் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக மக்களவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த இந்தி கடிதம் விவகாரம் சரிசெய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT