Published : 10 Jul 2019 10:02 AM
Last Updated : 10 Jul 2019 10:02 AM
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருப்பவர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் (60). உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான இவர், மத்திய அமைச்சராக பதவி ஏற்ற சில நாட்களில் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தார்.
அதில், அமைச்சகத்தின் அதிகாரிகளும், அலுவலர்களும் கோப்புகளை படித்து இந்தியில் குறிப்பு எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை அமைச்சக கோப்புகளின் குறிப்புகள், ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்தது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழி விதிகளின்படி, ‘அரசு அலுவலர் கோப்புகளின் குறிப்புகள் அல்லது கூட்டங்களின் நடவடிக்கை பதிவுகளை இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். வேறு எந்த மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டிய தேவை இல்லை’ என உள்ளது. இதே விதிகளின்படி, அந்த அலுவலகத்தில் இந்தி நன்கு அறிந்தவர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் குறிப்புகளும், நடவடிக்கை பதிவுகளையும் இந்தி மொழியில் எழுதுமாறு கூறலாம் எனவும் உள்ளது. இதன்படி, பணியாற்றும் ஒரு அலுவலர் அல்லது அதிகாரிக்கு இந்தி மொழிப் பாடப்பிரிவில் குறைந்தபட்ச பள்ளிக்கல்வி அவசியம் ஆகும். ஆனால், ஆங்கிலம் மட்டும் அறிந்த பலரும், மத்திய அரசு பணிகளுக்கான திறனாய்வு தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்த்தப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு வருகிறது. அத்துடன், பேசும் மொழியாக ஓரளவுக்கு இந்தி அறிந்திருப்பது அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
இதனிடையே, இந்தி பேசும் வட மாநிலத்தவர்களில் சிலருக்கும் கூட அதை தெளிவாக எழுத வருவதில்லை. இதன் காரணமாக, அமைச்சர் நிஷாங்கின் புதிய உத்தரவால் பலரும் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘இந்தி பேசும் மாநிலத்தவர்களும் பணியமர்ந்தது முதல் ஆங்கிலத்திலேயே எழுதிப் பழகி விட்டதால் அவர்களுக்கு அம்மொழியில் சுத்தமாக எழுத வருவதில்லை. ஏனெனில், மத்திய அரசுப்பணிகளுக்கான தேர்வின் மொழிக்கான பிரிவில் உள்ள வாய்ப்பால், இவர்கள் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தில் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம்.
தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தியில் பேசுவதே பெரிது. அதுதவிர, அவர்களுக்கு இந்தியில் எழுத வருவதில்லை. இதனால், இந்தி அறிந்தவர்களிடம் இருந்து உதவிகள் பெற்று நாட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அமைச்சர் தன் உத்தரவை விரைவில் வாபஸ் பெறுவார் என்ற நம்பிக்கை காரணம்’ என அவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் நிஷாங்கின் இந்த உத்தரவு இந்தி திணிப்பாக இருப்பினும், அதன் பின்னணியில் மற்றொரு காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. அமைச்சர் நிஷாங்கிற்கு ஆங்கிலம் புரிதல் சிறிது குறைவு எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அமைச்சர் நிஷாங்க் மத்திய அரசின் ‘இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் பரப்புதல்’ நிலைப்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT