Published : 06 Jul 2019 07:21 AM
Last Updated : 06 Jul 2019 07:21 AM
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ், உருது, இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் உவமைகளை பயன்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த பிசிராந்தையார், பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு வரிவிதிப்பின் போது யானையை குறிப்பிட்டு அறிவுரை கூறிய புறநானூற்றின் பாடலை அவர் உவமையாக்கினார்.
‘காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, ‘ மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்…( காய்ந்து முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத் தந்தால் மா அளவினும் குறைந்த நிலத்தினது என்றாலும் அதுபல நாட்களுக்கு வரும். நூறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில் புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும்) என்ற பாடலை குறிப்பிட்டவர் அதன் விளக்கத்தையும் அளித்தார்.
யானைக்கு உணவாக கவளம் அளிப்பது போல் தம் அரசு வரியை விதிக்கும் எனவும், மாறாக அதை நேரடியாக இறக்கி வயலை சேதத்திற்கு உள்ளாக்காது எனத் தெரிவித்தார்.
இப்பாடலை பாடிய புலவர் பெயரின் உச்சரிப்பில் லேசாக தடுமாறிய அமைச்சர் நிர்மலாவுக்கு, திமுக உறுப்பினர் ஆ.ராசா ‘பிசிராந்தையார்’ எனத் தெளிவாக எடுத்துரைத்து உதவினார். இந்த நிகழ்வை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் தமிழக எம்பிக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
அடுத்து மற்றொரு இடத்தில், பிரபல உருது மொழிப் பாடகர் மன்சூர் அகமதுவின் பாடலையும் அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார். அதில் அவர், ‘யக்கீன் ஹோதோ கோயி ராஸ்தா நிகல்தா ஹை, ஹவா கீ ஹோத்பீ லேகர் சிராக் ஜல்தா ஹை (நம்பிக்கை இருந்தால் ஏதாவது ஒரு வழி பிறக்கும், வேகமாக அடிக்கும் காற்றிலும் விளக்கு அணையாமல் எரியும்) எனக் உருதுவில் குறிப்பிட்டார்.
இந்த உருது பாடலின் வரியை உவமையாக்கியவர் இது, பல்வேறு தடைகளை தகர்த்து சீர்த்திருத்தங்களை துவக்கி இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசின் நம்பிக்கை எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்தி மொழியில் அவர், 'மஜ்பூத் தேஷ் கேலியே, மஜ்பூத் நாகரீக் சாயியே' (உறுதியான நாட்டுக்கு அதன் மனிதர்கள் உறுதிகொண்டிருப்பது அவசியம்) என்றார்.
அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியரின் சம்ஸ்கிருத வரிகளையும் அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர், ‘கார்ய புருஷ் கரே நா லக்ஷயம் சம்பா தயாதே (ஒருவர் உறுதி முடிவெடுத்தால் அவரது லட்சியம் நிறைவேறுவது நிச்சயம்) எனத் தெரிவித்தர். இந்த உவமைகளை தனது உறுதியான குரலில் தெரிவித்த அமைச்சர் நிர்மலாவை மக்களவையின் உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி குறைப்பு இல்லாததால் அதை குறிப்பிட்டு தமிழக எம்பிக்கள் கேள்வியுடன் கோஷங்கள் எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை அறிவித்த போது அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் டெல்லியிலும், லண்டனிலும் படித்தவர் ஆவார். அவருக்கு ஆந்திராவை சேர்ந்த பாரகலா பிரபாகர் என்பவருடன் திருமணமாகி பாரகலா வங்கமாயி என்ற ஒரு மகள் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT