Published : 10 Jul 2019 04:09 PM
Last Updated : 10 Jul 2019 04:09 PM
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவையில் அதிமுக எம்.பியான கே.ஆர்.அர்ஜுனன் வலியுறுத்தினார்.
இது குறித்து அதிமுக எம்பி அர்ஜுனன் இன்று மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது:
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் ஒரு மலை பிரதேசமாகும். இந்த மாவட்டத்தின் சுமார் ஏழு லட்சம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்கள். இங்கு இதர வகுப்பினரும் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் மிகவும் ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு மருத்துவ வசதி வேண்டுமானால் அவர்கள் நூறு கிலோ மீட்டர் வரை பயணித்து கோவைக்கு செல்லவேண்டி இருக்கிறது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.
அவசர கால மருத்துவ உதவி கிடைப்பதில்லை. அங்கு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு தேவையான 300 ஏக்கர் நிலம் இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்சிடம் உள்ளது. அந்த ஆலை மூடப்பட்டு பல ஆண்டுகளாக அந்த இடம் காலியாக உள்ளது. இனிமேல் அது இயங்க வாய்ப்பில்லை.
அங்கு பணிபுரிந்தவர்களுக்கு முழு நிவாரணத்தொகை அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி காலியாக உள்ள இந்த இடத்தில் மருத்துவமனையுடன் கூடிய ஓர் அரசு மருத்துவ கல்லூரியை மத்திய அரசு அமைத்துத் தரவேண்டும்.
நீலகிரியில் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் மேம்பாட்டிற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அதற்கு உரிய அமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என்று இந்த மாநிலங்களவையில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உதகமண்டலத்திலுள்ள மக்களின் தாகம் தீர்க்க நல்ல குடி தண்ணீர் வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்க ஓர் ஐ.டி. பூங்காவை உதகமண்டலத்தில் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT