Last Updated : 15 Nov, 2014 09:00 PM

 

Published : 15 Nov 2014 09:00 PM
Last Updated : 15 Nov 2014 09:00 PM

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை போர் நிறுத்த விதிமீறல்களை நிறுத்தினால் மட்டுமே சாத்தியம்: வி.கே.சிங்

எல்லைப் பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி தாக்குதல் நடத்தி வருவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும்போதுதான், அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து சிந்திக்க முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி முதல் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்கு வி.கே.சிங் ஜம்மு காஷ்மீருக்கு நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

"நீங்கள் (பாகிஸ்தான்) எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும். உங்களது செயலால் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான மனதை நாங்கள் இழக்கிறோம். பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களால் ஒரே நேரத்தில் இரண்டு செயல்களைச் செய்ய முடியாது.

ஆயுதப்படை சிறப்புச் சட்டம்

ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன‌. ஆனால் கட்டற்ற அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டத்தின் துணையோடு ராணுவ வீரர் குற்றம் செய்தாலும் உடனே அவர்மீது ராணுவம் விசாரணையை மேற்கொள்ளும்.

மேலும், இந்தச் சட்டத்திற்குக் கடிவாளம் இட உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இந்து முதல்வர்

இங்கு நடைபெற இருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியடையும். தேசத்தின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீர், இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு வளர்ச்சிதான் தேவை. அதை தீவிரவாதிகளாலும் தர முடியாது. அதை எங்களால் தர முடியும். தேர்தலுக்குப் பிறகே கூட்டணி விஷயங்கள் பேசப்படும்.

இங்கு, இந்து ஒருவர்தான் முதல்வராக வரவேண்டுமென்று சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். எந்த ஓர் உண்மையான அரசியல்வாதியும் தூய்மையான தலைவர்களும், இப்படிப் பேச மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x